மதுரை: தமிழகம் மற்றும் உலகத்தில் தமிழர்கள் வாழும் அனைத்து இடங்களிலும் 14-ஆம் தேதி பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாட உள்ளனர். பொங்கல் பண்டிகை என்றால் முதலில் நினைவுக்கு வருவது ஜல்லிக்கட்டு போட்டிகள் தான். ஜல்லிக்கட்டு போட்டி என்றால் முதலில் நினைவுக்கு வருவது மதுரை அவனியாபுரத்தில் நடப்பதுதான். இந்த போட்டியானது பாரம்பரிய விளையாட்டாக உள்ளது. ஜல்லிக்கட்டு போட்டி அவனியாபுரத்தில் வருகிற 14 -ஆம் தேதி நடைபெறுகிறது. பாலமேட்டில் 15-ஆம் தேதி நடைபெற உள்ளது. அடுத்ததாக அலங்காநல்லூரில் 16-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்காக., போட்டிகள் நடைபெறும் இடத்தில் முகூர்த்தக்கால்கள் நடப்பட்டு அதற்கான பணிகளை தீவிரமாக நடந்து வருகின்றனர். இந்த போட்டிக்கான வழிகாட்டுதல் மற்றும் நெறிமுறைகளை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மதுரையில் மூன்று இடங்களில் போட்டி நடைபெறும் என அறிவித்துள்ளது. அதில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய மூன்று இடமாகும். இந்த மூன்று இடங்களில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கு ஆன்லைன் முன்பதிவு இன்று மாலை ஐந்து மணி தொடங்க உள்ளது.
காளைகளின் உரிமையாளர்கள் மாடுபிடி வீரர்கள் மதுரை மாவட்ட நிர்வாகத்தின் madurai.nic.in என்ற இணையத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். மேலும் இன்று மாலை ஐந்து மணி முதல் அடுத்த நாள் மாலை ஐந்து மணி வரை மட்டும் முன்பதிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் ஓரிடத்தில் கலந்து கொண்ட காளை அடுத்த இடத்தில் கலந்து கொள்ள அனுமதி இல்லை. அதாவது அவனியாபுரத்தில் கலந்து கொண்ட காளை பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் கலந்து கொள்ள அனுமதில்லை என அறிவித்துள்ளது.
மேலும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் காளை உரிமையாளர் மற்றும் காளையுடன் மற்றொரு உதவியாளர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். காளை மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு செய்தவர்கள் சான்றுகள் மூலம் சரிபார்க்கப்பட்ட பின்னர் அதற்கான டோக்கன்கள் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். தரவிறக்கம் செய்யப்பட்ட டோக்கன்கள் உள்ள நபர்கள் மட்டுமே ஜல்லிக்கட்டு விளையாட முடியும் என மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா அவர்கள் தகவலை வெளியிட்டுள்ளார்.