மூன்றாம்பாலினத்தவருக்காக திறக்கப்பட்ட உலகின் முதல் பள்ளிவாசல்!
உலகில் ஆண் பெண் இருபாலரை தவிர திருநங்கை, திருநம்பி போன்ற மூன்றாம் பாலினத்தவர்களும் உள்ளனர்.ஆனால் உடலியல் மாற்றம் காரணமாக உருவாகும் இந்த மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சமூகத்தில் சரியான அங்கீகாரம் கிடைப்பதில்லை.இன்றுவரை அவமானங்களும், நிராகரிப்புகளும் மட்டுமே அவர்களுக்கு கிடைத்து வருகிறது.
பொது இடங்களில் அவர்களுக்கு தனி கழிவறை கூட கிடையாது.இப்படி நாள்தோறும் இந்த சமூகத்தில் புறக்கணிப்புகளை சந்தித்து வரும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு அவ்வபோது உலகின் ஏதாவது மூலையில் ஒரு சிறு அங்கீகாரம் கிடைக்கும்.அப்படி ஒரு அங்கீகாரம் தான் தற்போது கிடைத்துள்ளது.
அதாவது வங்கதேசத்தில் இஸ்லாம் மதத்தை பின்பற்றும் ஹிஜ்ரா சமூகத்தை சேர்ந்த மூன்றாம் பாலினத்தவர்கள் அங்குள்ள பள்ளிவாசலில் தொழுகை நடத்தி அனுமதி கிடையாது.இதனால் பிரம்மபுத்திரா நதிக்கரையோரம் ஹிஜ்ரா தொண்டு அமைப்பினர் உதவியுடன் மூன்றாம் பாலினத்தவர்களிடம் நிதி வசூல் செய்து புதிதாக பள்ளிவாசல் ஒன்று கட்டப்பட்டுள்ளது.
தக்ஷின் சார் கலிபாரி பள்ளிவாசல் என்ற இந்த மூன்றாம் பாலினத்தவர்களுக்கான பள்ளிவாசலில் உயிரிழந்த மூன்றாம் பாலினத்தவர்களை புதைப்பதற்கான இடமும் அதன் அருகிலேயே ஒதுக்கப்பட்டுள்ளது.இந்த பள்ளிவாசல் தான் உலகிலேயே முதல் முறையாக மூன்றாம் பாலினத்தவர்களுக்காக திறக்கப்பட்டுள்ள பள்ளிவாசல் என்பது குறிப்பிடத்தக்கது.
மூன்றாம் பாலினத்தவர்களும் நம்மை போன்ற ஒரு சாதாரண மனிதர்கள் தான். இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதருக்கும் அவரின் மதப்படி பிரார்த்தனை செய்ய உரிமை உள்ளது.அதை தடுக்க யாருக்கும் உரிமை கிடையாது. அந்த வகையில், மூன்றாம் பாலினத்தவருக்காக முதல் முறையாக திறக்கப்பட்டுள்ள இந்த பள்ளிவாசல் அவர்களுக்கான உரிமையை அடுத்தடுத்து பெற்று கொடுக்கும் முதல் படியாக இருக்கும் என்று நம்புவோம்.