குடிபோதையால் பறிபோன மோட்டார் சைக்கிள்! விரக்தியில் வாலிபர் எடுத்த விபரீத முடிவு!
குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக போலீசார் பைக்கை பறிமுதல் செய்ததால் மனைவியுடன் வாக்குவாதம் ஏற்பட்டு வாலிபர் ஒருவர் விபரீத முடிவை தேடிக் கொண்டுள்ளார்.
சென்னை அருகே எம் ஜி ஆர் நகர் கன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நிஷாந்த் வயது 24. இவரது மனைவி அபிரினி. இவர்கள் இருவருக்கும் கடந்த ஆறு மாதத்திற்கு முன்புதான் காதல் திருமணம் நடைபெற்றது. நிஷாந்த் தேனாம்பேட்டையில் உள்ள அலுவலகம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளதாக தெரிகிறது.
இதையடுத்து நிஷாந்த் தனது நண்பர்களுடன் சேர்ந்து கேகே நகர் பகுதியில் மது அருந்தியுள்ளார். பின்னர் மது போதையுடன் தனது மோட்டார் சைக்கிளில் ஜாபர்கான் பேட்டை காசி தியேட்டர் வழியாக தனது வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது.
அவர் சென்ற பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த எம்ஜி.ஆர்.நகர் போலீஸ் நிலைய ஏட்டு பார்த்திபன், போலீஸ்காரர் கார்த்திக் ஆகியோர் நிசாந்தின் பைக்கை நிறுத்தி விசாரித்தனர். விசாரணையில் நிஷாந்த் மது போதையில் இருந்தது தெரிய வரவே அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் அபராதமாக ரூபாய் 10 ஆயிரத்தை கட்டி விட்டு மோட்டார் சைக்கிளை எடுத்துச் செல்லுமாறு கூறி அவரது பைக்கை பறிமுதல் செய்தனர்.
இதனால் நிஷாந்த் நடந்தே வீட்டுக்குச் சென்றுள்ளார். நள்ளிரவில் வீடு வந்த கணவரிடம் பைக் எங்கே என அப்ரினி கேட்கவே குடிபோதையில் ஓட்டி வந்ததால் போலீசார் பறிமுதல் செய்ததாக கூறியுள்ளார். காலையில் 10 ஆயிரம் பணம் செலுத்தி விட்டு தான் பைக்கை எடுக்க முடியும் என்று கூறியதால் கணவன் மனைவி இருவர் இடையே பெரிய வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் பின்னர் அப்ரினி தூங்க சென்று விட்டார்.
இதனால் விரக்தி அடைந்த நிஷாந்த் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். காலையில் எழுந்து வந்து அவரின் மனைவி பார்த்தபோது தனது கணவர் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து அலறினார்.
இது பற்றி தகவல் அறிந்த எம்ஜிஆர் நகர் போலீசார் விரைந்து வந்து நிஷாந்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.