இன்று முதல் மீண்டும் திரைஅரங்குகள்! வரிசை கட்டி நிற்கும் 40 படங்கள்!

0
215
Theaters again from today! 40 pictures in a row!

இன்று முதல் மீண்டும் திரைஅரங்குகள்! வரிசை கட்டி நிற்கும் 40 படங்கள்!

கடந்த ஒன்றரை வருடங்களாகவே கொரோனா பெரும் தொற்று காரணமாக தமிழகம் முழுவதும் பயங்கர கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நடைமுறையில் உள்ளது குறிப்பிடத் தக்கது. நடுவில் சில தளர்வுகளை அரசு அறிவித்திருந்தாலும், மீண்டும் கொரோனாவின் இரண்டாம் அலை அதிகரித்ததன் காரணமாக பொது இடங்களான திரை அரங்குகள், பூங்காக்கள், கடற்கரைகள் என அனைத்தையும் மூடி வைத்திருந்தனர்.

இரண்டாம் அலை ஆரம்பிப்பதற்கு முன்பாக சில நாட்கள் திரையரங்குகள் திறக்கப்பட்டாலும், மீண்டும் அதிகரித்த இரண்டாம் கொரோனாவின் கோர பிடி  அதிகரித்ததை தொடர்ந்து அனைத்தும் மூடப்பட்டிருந்தன. கடந்த ஏப்ரல் மாதம் முதல் மூடப்பட்ட தியேட்டர்கள் அனைத்தும் இன்று திங்கட்கிழமை முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் திறக்க அரசு அனுமதித்துள்ளது.

இன்று பெரும்பாலான தியேட்டர்கள் திறக்கப்படும் என்றும், வருகிற வெள்ளிக்கிழமை அதிக படங்கள் திரையிடப்படும் என்பதால், அன்று முதல் நூறு சதவிகித தியேட்டர்கள் இயங்கும் என்று தியேட்டர் அதிபர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கொரோனா தொற்றின் காரணமாக திரைக்கு வராமல் முடங்கி உள்ள 40க்கும் மேற்பட்ட புதிய படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன. மேலும் படப்பிடிப்பு முடிந்தாலும் பல மாதங்களாக ரிலீசாகாமல் இருக்கும் விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன், கடைசி விவசாயி, லாபம், யாதும் ஊரே யாவரும் கேளிர் ஆகிய படங்களை உடனடியாக திரைக்கு கொண்டு வருகிறார்கள்.

இதுபோல் படப்பிடிப்பு முடிந்த கங்கனா ரணாவத் நடித்துள்ள மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையான தலைவி, காஜல் அகர்வால் நடித்த கருங்காப்பியம், அருண் விஜய் நடித்துள்ள அக்னி சிறகுகள், சினம், சசிகுமார் நடித்துள்ள ராஜவம்சம், எம்.ஜி.ஆர் மகன், விஜய் ஆண்டனியின் தமிழரசன், எஸ்.ஜே.சூர்யாவின் பொம்மை, விஷால், ஆர்யா நடித்துள்ள எனிமி, விக்ரம் பிரபுவின் டாணாக்காரன், கவுதம் கார்த்திக்கின் ஆனந்தம் விளையாடும் வீடு, சுந்தர்.சியின் அரண்மனை 3 ஆகிய படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வருகின்றன.

தொடர்ந்து சாந்தனுவின் முருங்கைக்காய் சிப்ஸ், பிரபுதேவா நடித்துள்ள பாஹீரா, அசோக் செல்வன் நடித்துள்ள ஹாஸ்டல், ஹிப்ஹாப் ஆதியின் சிவகுமாரின் சபதம், அதர்வாவின் ஒத்தைக்கு ஒத்த, சந்தானம் நடித்துள்ள சபாபதி, சர்வர் சுந்தரம், திரிஷாவின் ராங்கி, விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா நடித்துள்ள பிசாசு 2, சிருஷ்டி டாங்கே நடித்துள்ள கட்டில், ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள ஓமன பெண்ணே, சிவாவின் சுமோ, இடியட், ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ஜெயில், ஆயிரம் ஜென்மங்கள், ஆர்.கே.சுரேசின் விசித்திரன் உள்ளிட்ட மேலும் பல படங்களும் திரைக்கு வர உள்ளன. அதே போல் ஓடிடி யில் வெளியிட பேசிவந்த சிவகார்த்திகேயனின் டாக்டர் பட்டமும் திரையில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை மற்றும் நயன்தாராவின் நெற்றிக்கண் படங்களையும் திரையரங்கில் திரையிட ஆலோசித்து வருகின்றனர்.

என்னதான் திரையரங்குக்குள் திறந்தாலும், 50 சதவிகித மக்களை மட்டுமே அனுமதிக்கப் படவும், முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளை பயன்படுத்தவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது. அனைவரும் தனி நபர் இடைவெளியை மறக்காமல் கடைபிடிக்கவும், முககவசம் அணியவும் மறக்காதீர்கள் மக்களே. கோரோனாவிடம் இருந்து விழிப்புடன் இருங்கள்.