8 மாதங்களுக்குப் பிறகு இன்று முதல் மீண்டும் திறப்பு..! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

0
119

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட திரையரங்குகள் இன்று முதல் மீண்டும் திறக்கப்படுகின்றன.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டன. ஊரடங்கில் அவ்வபோது சில தளர்வுகள் அறிவித்து வந்த நிலையில், திரையரங்குகளை திறக்க உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, தமிழகத்தில் நவ. 10ம் தேதி முதல் 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. இது திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் ரசிகர்களிடம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து கடந்த சில தினங்களாக திரையரங்குகளை சுத்தப்படுத்தும் பணி நடந்து வந்தது. 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகளை திறக்கலாம் என்று நிபந்தனை விதித்துள்ளதால் இரண்டு இருக்கைகளுக்கு நடுவில் உள்ள இருக்கையில் ரிப்பன் மற்றும் ஸ்டிக்கர்கள் ஒட்டி தடுத்து வைத்துள்ளனர். திரையரங்கிற்கு வரும் அனைவருக்கும் நுழைவாயிலில் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டிக்கெட் கவுண்டர்களில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தி டிக்கெட்டுகளை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் திரையரங்கிற்கு வரும் பார்வையாளர்கள், ஊழியர்கள் என அனைவரும் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற பாதுகாப்பு நெறிமுறைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்படி தமிழகம் முழுவதும் ஆயிரத்துக்கும் அதிகமான திரையரங்குகள் இன்று முதல் திறக்க தயார் நிலையில் உள்ளது. இருப்பினும் வி.பி.எப் கட்டண பிரச்சினைக்கு தீர்வு தெரியாததால் புதிய படங்களை வெளியிட மாட்டோம் என்று நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ள நிலையில், ரஜினி நடித்த சிவாஜி, கமலின் தசாவதாரம், விஜய் நடித்த பிகில், அஜித் நடித்த விஸ்வாசம், தனுசின் அசுரன் மற்றும் தாராள பிரபு, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் போன்ற படங்களை மீண்டும் திரையிட திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

ஆனால் கொரோனா அச்சுறுத்தல் மற்றும் புதிய படங்கள் எதும் வெளிவராததால் ரசிகர்கள் திரையரங்கிற்கு படம் பார்க்க வருவார்களா..?? என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.