AIADMK:பாஜகவில் முக்கிய நிர்வாகியாக இருக்கும் நயினார் நாகேந்திரன் அதிமுகவுக்கு மீண்டும் இணையும் வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் முக்கிய பாஜக நிர்வாகியாக இருப்பவர் நயினார் நாகேந்திரன். இவர் முன்னாள் அதிமுக அமைச்சர் ஆவார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி அதிமுக கட்சியில் உரிய பதவி வழங்காததால் பாஜகவில் இணைந்தார். அப்போது அவருக்கு பாஜக மாநில துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது. தமிழிசை மாநில தலைவராக இருந்தார்.
அதன் பிறகு எல்.முருகன் அவரை தொடர்ந்து அண்ணாமலை என பாஜக மாநில தலைவர் பதவிகள் வழங்கப்பட்டது. பாஜகவின் மாநில தலைவர் பதவி தனக்கு கிடைக்கும் என எதிர்பார்த்து இருந்த அவருக்கு தொடர் ஏமாற்றத்தை கொடுத்தது பாஜக. இதனால் திமுகவில் இணைந்து விடலாமா என நயினார் நாகேந்திரன் தனது ஆதரவாளர்களுடன் பேசி வருவதாக தகவல் கசிந்து வருகிறது.
பாஜகவின் மீது விரக்தியில் இருக்கும் நயினார் நாகேந்திரனை மீண்டும் அதிமுகவில் இணைய வைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி முடிவு செய்து இருப்பதாக அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது. அதிமுக தென் மாவட்டங்களில் தனது செல்வாக்கை இழந்து வருவதால் நயினார் நாகேந்திரனை அதிமுக பக்கம் இழுக்க வேண்டும் என முடிவு செய்து இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
அதை உறுதி செய்யும் வகையில் அதிமுக தலைமை நிலையச் செயலாளர் எஸ்.பி வேலுமணி, தனது மகன் திருமண அழைப்பிதழ் கொடுக்கும் சாக்கில் அதிமுகவுக்கு வாருங்கள் என கிரீன் சிக்னல் கொடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.