Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கூட்டத்தில் கொரோனா அறிகுறி உள்ளவர்களை கண்டறிய புதிய செயலி

கூட்டத்தில் கொரோனா அறிகுறி உள்ளவர்களை கண்டறிய புதிய செயலி

உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான நாடுகளை கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கிய கொரோனா வைரஸ் பாதிப்பானது இந்தியாவிலும் ஆரம்பித்து நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்தியாவில் இந்த கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும் நோய் அறிகுறி உள்ளவர்களை எளிதாக கண்டறிய போதுமான கருவிகள் இல்லாமல் சுகாதாரத்துறை ஊழியர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியிருந்தனர்.

இந்நிலையில் கோவை ஶ்ரீசக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் நியூநெட்ஸ் டெக்னாலஜி நிறுவனம் ஆகியவை இணைந்து சிசிடிவி கேமரா மற்றும் மொபைல் கேமரா மூலமாக, கொரோனா வைரஸ் தாக்குதலின் முதன்மையான அறிகுறியான காய்ச்சலை கண்டறியும் தெர்மல் செயலியை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்த செயலியை அறிமுகப்படுத்த நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக  உள்ளாட்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இந்த தொழில் நுட்ப வசதியை வழங்கும் செயலியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன் குமார்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மருத்துவர்களுக்கு பயனுள்ளதாக அமைந்த இந்த புதிய செயலியின் தொழில்நுட்பம் குறித்து நியூநெட்ஸ் தலைமை செயல் அதிகாரி ஜெய் கீர்த்தி கூறியதாவது, பொது மக்கள் அதிகமாக ஒன்று கூடும் இடங்களில் தனித்தனியாக கொரோனா அறிகுறியான காய்ச்சல் பாதித்தவரைக் கண்டறியும் முறை அதிக நேரம் எடுக்கும். மேலும் இது போன்ற சோதனைகளால் மருத்துவப் பணியாளர்களுக்கு அதிக ரிஸ்க்கும் உண்டு.

எனவே, இந்த புதிய தொழில்நுட்பமானது காய்ச்சலைக் கண்டறிய உதவியாக இருக்கும். குறிப்பாக இந்த செயலியில் பயன்படுத்தும் சிசிடிவி தெர்மல் ஸ்கேனிங் போன்ற பெரிய கருவிகளின் வழியாக ஒரு விநாடிக்கு 15 முதல் 20 பேரின் உடல் வெப்பத்தை பரிசோதனை செய்து, மேலும் கூட்டமாக இருக்கும் பகுதியில் இந்த கருவியை பயன்படுத்தி காய்ச்சல் இருப்பவரை எளிதாக கண்டறிய முடியும். மேலும் பாதிக்கப்பட்டவர்களை புகைப்படம் எடுத்து, அதை சர்வரிலும் சேமிக்கலாம்.

மேலும், பாதிக்கபட்ட நபர்கள் நடமாடிய பகுதியில் இருந்த மற்ற நபர்களைக் கண்டறிந்து, பரிசோதித்து, இதன் மூலமாக அவர்களை தனிமைப்படுத்த முடியும். மொபைல் கேமரா தெர்மல் ஸ்கேனிங் தொழில்நுட்பம் மூலம் விநாடிக்கு 3 பேர் வரை பரிசோதிக்க முடியும். ‘ஆர்டிஃபிஷியல் இண்டலிஜென்ஸ்’ (Artificial Intelligence) எனப்படும் அதிநவீன தொழில்நுட்பத்தின் வழியாக இந்த செயலியானது செயல்படுகிறது என்று ஜெய் கீர்த்தி கூறியுள்ளார்.  கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கவும், அதன் தாக்கத்தை அறியவும், வைரஸ் பாதிப்படைந்தவர்களை குணப்படுத்த தடுப்பு மருந்து கண்டு பிடிக்கவும் பலர் முயற்சிக்கிற இந்த நேரத்தில், இது போன்ற புதிய செயலி தமிழகத்திற்கு கிடைத்துள்ளது மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version