Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இவர்கள் இப்போதைக்கு தடுப்பூசி செலுத்தி கொள்ள அவசியமில்லை! திட்டத்தை கைவிட்ட மத்திய அரசு!!

இவர்கள் இப்போதைக்கு தடுப்பூசி செலுத்தி கொள்ள அவசியமில்லை! திட்டத்தை கைவிட்ட மத்திய அரசு!!

கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வந்ததன் காரணமாக அதை தடுக்க கடந்த ஆண்டு முதல் இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கிய தடுப்பூசி செலுத்தும் பணியில் முதல் கட்டமாக சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டது. தடுப்பூசி செலுத்தும் பணியை மேலும் விரிவுபடுத்தும் வகையில் கடந்த ஆண்டு மே 1ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒமிக்ரான் வைரஸ் நாட்டில் வேகமாக பரவி வருகிறது. இதனையடுத்து நாட்டில் குறைந்து வந்திருந்த கொரோனா தொற்றானது தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் நாட்டில் தொற்று பரவல் அதிகரித்ததன் காரணமாக கடந்த 3-ஆம் தேதியிலிருந்து 15 வயது முதல் 18 வயதிற்கு உட்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கியது. அதை தொடர்ந்து கடந்த 10-ஆம் தேதி முதல் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்கள் ஆகியோருக்கு மூன்றாவது டோஸாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கியது.

இந்த நிலையில் 12 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழுவின் தலைவர் என்.கே.அரோரா கூறியிருந்தார். இது குறித்து அவர் கூறுகையில், 12 வயது முதல் 14 வயதிற்குட்பட்ட சிறார்களுக்கு மார்ச் மாதத்தில் தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இந்த அறிவிப்புக்கு மத்திய சுகாதார அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சகம் அளித்துள்ள விளக்கத்தில், 12 வயது முதல் 14 வயதிலான சிறுவர்களுக்கு இப்போதைக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் இல்லை என்றும் இது தொடர்பாக அரசு இன்னும் முடிவு எடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

Exit mobile version