Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தடுப்பூசி போடுவதில் இவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்!

தடுப்பூசி போடுவதில் இவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்!

கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு முதல் இந்தியாவில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டு முழுவீச்சில் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணியை மேலும் விரிவுபடுத்தும் வகையில் கடந்த 3ம் தேதி முதல் இந்தியாவில் 15 முதல் 18 வயது வரை உடைய சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று நாடு முழுவதும் வேகமாக பரவி வருவதன் காரணமாக தொற்று பரவலை கட்டுபடுத்த பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என கடந்த மாதம் 25ஆம் தேதி மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது. இதையடுத்து கடந்த 10ம் தேதி முதல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள கொரோனா தடுப்பூசி மையங்களில் தனி கவுண்ட்டர்கள் அமைத்து ‘பூஸ்டர் டோஸ்’ போடுகிறவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் அனைத்து மாவட்ட துணை பொது சுகாதாரத்துறை இயக்குனர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில், தமிழகத்தில் கடந்த 3-ந் தேதியில் இருந்து 15 வயது முதல் 18 வயது வரை உடைய சிறார்களுக்கும், அதை தொடர்ந்து கடந்த 10-ந் தேதி முதல் ‘ கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளார்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.

இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கொரோனா தடுப்பூசி மையங்களில் ‘பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசி போடுகிறவர்களுக்கும் மற்றும் 15 வயது முதல் 18 வயது உடைய சிறார்களுக்கு ‘கோவேக்சின்’ தடுப்பூசி போடுவதற்கு சிறப்பு கவுண்ட்டர்கள் அல்லது வரிசைகள் ஏற்படுத்தி முன்னுரிமை வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் தற்போது செயல்பட்டு வரும் தனியார் கொரோனா தடுப்பூசி மையத்தில் வழக்கமாக நடைபெற்று வரும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி அல்லாமல் ‘பூஸ்டர் டோஸ்’ மற்றும் 15 முதல் 18 வயது உடைய சிறார்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி போடும் பணியை தொடங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version