வாக்குப்பதிவு இயந்திரகளினால் நாங்கள் தோல்வி அடைந்தோம் என புலம்புவார்கள்! கலாய்த்து பேசிய அமித்ஷா!
தேர்தல் முடிவுக்கு பின்னர் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலமாக நாங்கள் தோல்வி அடைந்து விட்டோம் என்று இந்தியா கூட்டணியினர் புலம்புவார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் கலாய்த்து பேசியுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இன்று(மே30) மாலை 6 மணியுடன் தேர்தல் பரப்புரை முடிகின்றது. இதையடுத்து அனைத்து கட்சியினரும் தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் கடைசி கட்ட நாடாளுமன்றத் தேர்தல் ஜூன் 1ம் தேதி நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெறும் நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் உத்திரப் பிரதேச மாநிலத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
உத்திரப் பிரதேச தேர்தல் பரப்புரையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் “தற்பொழுது வரை 6 கட்டத் தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளது. அதில் 5 கட்டத் தேர்தல்களிலேயே பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 310 இடங்களை பிடித்துவிடுவார். காங்கிரஸ் கட்சி 40 இடங்களை பெறுவதே சந்தேகமாக இருக்கின்றது.
பாகிஸ்தான் நாட்டிடம் அணுகுண்டு இருப்பதாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்கள் கூறுகின்றனர். அவர்களுக்கு வேண்டுமானால் அணுகுண்டுகளை பார்த்து பயம் இருக்கும். ஆனால் பாஜக கட்சியினருக்கு அணுகுண்டுகளை பார்த்து பயம் எல்லாம் இல்லை. காஷ்மீர் மாநிலம் எப்பொழுதும் இந்தியாவின் ஒரு பகுதியாகத்தான் இருக்கும்.
நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெறவுள்ளது. அன்றைய தினம் இரண்டு இளவரசர்கள்(ராகுல் காந்தியும், அகிலேஷ் யாதவ்வும்) பிற்பகல் செய்தியாளர்களை சந்திப்பார்கள். மேலும் அவர்கள் அந்த செய்தியாளர்கள் சந்திப்பில் நாங்கள் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலமாக தோல்வி அடைந்துவிட்டோம் என்று கூறுவார்கள்.
இந்தியா கூட்டணியை சேர்ந்தவர்கள் தோல்வி அடைந்து தோல்விக்கான காரணத்தை வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது போடலாம் என்று காத்துக் கொண்டிருக்கின்றனர்” என்று மக்கள் மத்தியில் அந்த தேர்தல் பரப்புரையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் பேசினார்.