மழை வெள்ள பாதிப்புகளுக்கு இந்த தொகை தந்தால் தான் சரியாக இருக்கும்! – டி.ஆர்.பாலு!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது பொழிய தொடங்கியுள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டதை தொடர்ந்து அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியது. அதன் காரணமாக பெய்த கனமழையால் சென்னை மற்றும் கன்னியாகுமரி உட்பட பல்வேறு கடற்கரை சூழ்ந்துள்ள மாநிலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து பாதிப்புக்கு உள்ளானது.
இதையடுத்து நிதி வேண்டி தமிழக அரசு சார்பில் டெல்லி சென்றுள்ள திமுக மக்களவை உறுப்பினர் டி. ஆர். பாலு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து வெள்ள நிவாரணத்திற்காக கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். இந்த சந்திப்பிற்குப் பிறகு நிருபர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறினார். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது. 2500க்கும் மேற்பட்ட வீடுகள், 50 ஆயிரம் ஹெக்டேர் பயிர்கள் சேதமடைந்துள்ளன.
மேலும் 54 பேர் பலியாகியுள்ளனர். 8 முதல் 14 ஆம் தேதி வரை இயல்பைவிட அதிகமாக 49.6% மழை பொழிவு ஏற்பட்டு உள்ளது. முதல் அமைச்சரால் அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழுவின் ஆய்வுக்கு பிறகு முதற்கட்டமாக மீட்பு பணிகளை மேற்கொள்வதற்காக மாநில பேரிடர் மேலாண்மை நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.
டெல்டா மாவட்டங்களில் 49,757 ஹெக்டர் பரப்பளவிற்கு பயிர் சேதம் ஏற்பட்டு உள்ளதால், உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், வெள்ள பாதிப்புகளை சீரமைக்க முதல் கட்டமாக மத்திய அரசிடமிருந்து 550 கோடி நிதி கேட்கப்பட்டுள்ளதாகவும், நிரந்தர நிவாரணமாக ரூ.2,079 கோடி கேட்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் மத்திய அரசு தரப்பில் இருந்து 6 பேர் கொண்ட குழு வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக இன்று மாலை தமிழகத்திற்கு வர உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.