தமிழகத்தில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை 20% பேர் மட்டும் தான் செலுத்திக் கொண்டுள்ளார்கள்.
இன்னும் 4.40 கோடி பேர் செலுத்த வேண்டியுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார். தமிழகம் முழுவதும் நேற்று 50,000 பகுதிகளில் 38 வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
அதில் சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெற்ற முகாமை அமைச்சர் சுப்பிரமணியன் ஆரம்பித்து வைத்தார். அதன்பிறகு அவர் வழங்கிய பேட்டியில் தெரிவித்ததாவது நாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிக அளவில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டிருக்கின்றன.
முதல் 2 தவணைகள் தடுப்பூசியை 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் செலுத்தியுள்ள நிலையில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை மட்டும் 20 சதவீதம் பேர் தான் செலுத்திக் கொண்டுள்ளார்கள்.
அதாவது இன்னும் 4.40 கோடி பேர் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளாமல் இருக்கிறார்கள் சுதந்திர தின விழாவை முன்னிட்டு 75 நாட்களுக்கு இலவசமாக மத்திய அரசு போஸ்டர்ஸ் தடுப்பூசியை செலுத்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
இந்தச் சலுகை எதிர்வரும் 30ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. அதன் பிறகு இந்த சலுகை தொடர்ந்து வழங்கப்படுமா? என்பது தொடர்பான அறிவிப்புக்காக காத்திருக்கிறோம் என தெரிவித்துள்ளார் சுப்பிரமணியன்.
இருந்தாலும் எதிர்வரும் 30ம் தேதி வரையில் சுகாதாரத்துறையின் 11,333 இடங்களில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும். அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதிக்கு பிறகு புதன்கிழமை இது வரும் கர்ப்பிணி மற்றும் 16 வயதிற்குட்பட்டோருக்கு 13 வகையான தடுப்பூசி செலுத்தப்படும்.
இந்த தடுப்பூசி முகாம்கள் துணை சுகாதார நிலையம், ஆரம்ப சுகாதார நிலையம், வட்டார சுகாதார நிலையம், மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நடைபெறும். சென்ற வருடம் ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.
இந்தத் திட்டத்தில் தற்போது சென்னை விருகம்பாக்கத்தில் 90 லட்சமாவது பயனாளிக்கு மருந்து பெட்டகம் வழங்கப்படவுள்ளது.
இந்தத் திட்டத்தில் 74% பேர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர். இதில் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் நோய், ஆதரவு சிகிச்சை, இயன்முறை சிகிச்சை, டையாலிசிஸ் உள்ளிட்ட நோய்களுக்கான மருந்து பெட்டகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
மிக விரைவில் ஒரு கோடி பயனாளிகள் இந்த திட்டத்தால் பயன் பெறுவார்கள் ஏழை எளிய மக்களுக்கான இந்த திட்டம் நாட்டிலேயே முன்னோடியாக இருக்கிறது என்று சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.