மூன்று நாட்கள் தொடர் விடுமுறை எதிரொலி.. ஒரே நாளில் 400 கோடிக்கு மது விற்பனை..!!
தமிழகத்தில் நாளை மறுநாள் தேர்தல் நடைபெற உள்ளது என்பதால் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று முதல் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது. இன்று தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாள் என்பதாலும், நாளை மறுநாள் தேர்தல் என்பதாலும் தமிழக அரசு மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளித்துள்ளது.
இதனையடுத்து தேர்தல் முடிந்த மறுநாள் அதாவது 20ஆம் தேதி தான் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும். இதனால் நேற்று தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. அடுத்த 3 நாட்களுக்கு குடிக்க முடியாது என்பதால் பலர் நேற்றே வயிறு முட்ட குடித்தனர். இன்னும் சிலரோ அதிக சரக்குகளை வாங்கி சென்றனர்.
ஒருவருக்கு ஒரு பீர், 3 குவாட்டர் பாட்டில்கள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். அதை மீறி விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். ஆனால், நேற்று மதுப்பிரியர்கள் அளவுக்கு அதிகமான பாட்டில்களை மறைத்து வைத்து வாங்கி சென்றனர். இதனை திருட்டுத்தனமாக விற்கவும் வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், வழக்கமாக தீபாவளி மற்றும் பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் தான் டாஸ்மாக் கடைகளில் விற்பனை அதிகரிக்கும் வருமானமும் அதிகமாக இருக்கும். ஆனால், நேற்று ஒரே நாளில் மட்டும் வழக்கமான மது விற்பனையை விட இரண்டரை மடங்கு அதிகமாக விற்பனையாகி இருப்பதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமல்ல வழக்கமாக தினசரி மதுவிற்பனை 150 கோடி அளவிற்கு இருக்குமாம். ஆனால் அடுத்த மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை என்பதால் நேற்று மட்டும் சுமார் 400 கோடிக்கு மது விற்பனையாகி இருப்பதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.