ஓபிஎஸ் அவர்களை அப்படி சொல்ல என்ன காரணம்? குருமூர்த்தி விளக்கம்
நேற்று திருச்சியில் நடைபெற்ற துக்ளக் விழா ஒன்றில் துணை முதல்வர் ஓபிஎஸ் அவர்களை ஆண்மை இல்லாதவர் என்று குருமூர்த்தி பேசியதாக வெளிவந்த செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இன்று காலை இதற்கு பதிலடி கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் ’முதலில் குருமூர்த்தி அவர்கள் ஆண்மை உள்ளவர்தானா என்பதை பார்க்க வேண்டும் என்றும், ஆண்மை இல்லாத ஒருவர் தான் இன்னொருவரை பார்த்து ஆண்மை இல்லாதவர் என்று கூறுவார் என்றும் கூறியிருந்தார்
இந்த நிலையில் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, தான் பேசியது என்ன? என்பது குறித்து விளக்கமளித்ததோடு தான் பேசிய ஒரு வார்த்தையை மட்டும் எடுத்துக்கொண்டு தவறாக விமர்சனம் செய்வதாக அமைச்சர் ஜெயக்குமாருக்கு விளக்கம் கொடுத்துள்ளார். இதுகுறித்து குருமூர்த்தி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
ஓபிஎஸ்சிடம் பேசிய போது அவரைத் தனிப்பட்ட முறையில் குறிப்பிடவில்லை. ஏன் அதிமுகவினர் துணிவில்லாமல் சசிகலா காலில் விழுகிறார்கள் என்கிற அர்த்தத்தில் தான் கேட்டேன். அது அவருக்கும் தெரியும். அவர் தான் அதிமுகவை சசிகலா விடமிருந்து காப்பாற்றினார். அவர் மேல் எனக்கு மிகவும் மரியாதை
இதை ஏற்கனவே ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறேன். திருச்சி துக்ளக் கூட்டத்தில் அதைக் கூற காரணம், எனக்கு முன் பேசிய பாண்டே, ஜெயாவை ஆதரித்த துக்ளக் அவரே ஏற்ற சசியை எதிர்த்தது சரியல்ல என்று கூறினார். பதில் கூறும்போது ஓபிஎஸ் சந்திப்பு, அவர் எப்படி அதிமுகவை மீட்டார் என்று கூறினேன்.
எனவே முன்னும் பின்னும் நான் என்ன கூறினேன் என்று கூறாமல் நடுவில் கூறியதை திரித்து பரப்புவது கண்ணியமல்ல. மறுபடியும் கூறுகிறேன். எனக்கு அதிமுகவில் அதிகம் பேரைத் தெரியாது. தெரிந்தவர்களில் எனக்கு ஓபிஎஸ் மேல் தான் அதிகம் மரியாதை. கருத்து வேறுபாடுகள் தவிர்த்து. இவ்வாறு குருமூர்த்தி கூறியுள்ளார்.
குருமூர்த்தி பேசியதற்கு ஓபிஎஸ் அவர்களே இதுவரை எந்த விமர்சனமும் தெரிவிக்காத நிலையில் ஜெயகுமார் திடீரென குருமூர்த்தியை கண்டனம் செய்துள்ள நிலையில் இந்த விளக்கத்தை ஏற்று அவர் வருத்தம் தெரிவிப்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்