ஓபிஎஸ்க்கு இடிமேல் இடி! இபிஎஸ் பக்கம் சாயும் முக்கிய புள்ளிகள்!! பரபரக்கும் அரசியல் களம்!!
கடந்த சில மாதங்களாகவே தமிழக அரசியலில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. அதிமுக – பாஜக கூட்டணி முறிவு, பாஜக, திமுக உள்ளிட்ட கட்சிகளின் முக்கிய புள்ளிகள் அதிமுகவில் இணைதல் உள்ளிட்டவைகள் தொடர்ந்து நடந்து வருவதால் அதிமுகவின் பலம் மேலும் அதிகரித்து வருகிறது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு பிறகு அதிமுகவில் பதவி போட்டி ஏற்பட்டு இபிஎஸ் தலைமையில் ஒரு அணி, ஓபிஎஸ் தலைமையில் ஒரு அணி என்று அதிமுக இரண்டாக பிரிந்தது.
அதன் பின்னர் இபிஎஸ் அவர்களை முதல்வராக அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் எம்.எல். ஏக்கள் தேர்ந்தெடுத்து பதவியில் அமர வைத்தனர். அதன் பின்னர் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்க்கிடையே இருந்த கருத்து முரண்பாடு நீங்கி இருவரும் இணைந்து அதிமுகவை வழிநடத்தி வந்தனர்.
அதன் பின்னர் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக, திமுகவிடம் சிறு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அதிமுக தோல்வி அடைந்ததற்கு காரணம் பாஜக உடன் கூட்டணி வைத்தது தான் என்ற கருத்து பரவலாக பேசப்பட்டு வந்தது.
சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பின்னர் அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என்று தொண்டர்கள் தெரிவித்து வந்தனர். ஒற்றை தலைமை இருந்தால் தான் கட்சியை வலுப்படுத்த முடியும் என்ற விவகாரம் உச்சம் பெற்ற நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 11 அன்று அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்று எடப்பாடியார் அவர்கள் அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதன் பின்னர் ஓபிஎஸ் அவர்கள் டி.டி.வி. தினகரன் மற்றும் சசிகலா உடன் இணக்கமாக இருந்த காரணத்தினால் அவரை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடியார் அதிரடி காட்டினார்.
அதுமட்டும் இன்றி அதிமுகவின் கொடி மற்றும் சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று ஓபிஎஸ்க்கு எதிராக எடப்பாடியார் அவர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதிமுகவின் பெயர், சின்னம் மற்றும் கொடியை ஓபிஎஸ் தரப்பு பயன்படுத்துவதால் மக்களுக்கு குழப்பம் ஏற்படுகிறது. இதனால் தேர்தல் சமயத்தில் பிரச்சனைகள் எழும் என்று கூறி எடப்பாடியார் தொடர்ந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அதில் அதிமுகவின் கொடி சின்னம், லட்டர் பேட் உள்ளிட்டவைகளை ஓபிஎஸ் பயன்படுத்த நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்றும் இந்த வழக்கு முடியும் வரை இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த வழக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடரப்பட்ட நிலையில் அதன் பின்னர் 2 முறை விசாரணைக்கு வந்த பொழுது பதில் மனு தாக்கல் செய்ய ஓபிஎஸ் தரப்பில் இருந்து 2 முறை கால அவகாசம் வேண்டும் என்று கேட்டுக்கொண்டதன் பேரில் நீதிமன்றமும் அவருக்கு கால அவகாசம் வழங்கியது.
இந்நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில் ஏற்கனவே 2 முறை கால அவகாசம் வழங்கிய நிலையில் ஓபிஎஸ் தரப்பில் இருந்து எந்த ஒரு பதில் மனுவும் தாக்கல் செய்யப்பட வில்லை என்று இபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதன் பின்னர் அதிமுக பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்ட விகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு நம்பர் ஆகிவிட்டது. விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது. இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய தயராக இருக்கிறோம். குறுகிய கால அவகாசம் வேண்டும் என்றும் தீபாவளி முடிந்த பின்னர் பதில் மனு தாக்கல் செய்கிறோம் என்று ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதை கேட்ட நீதிபதி சதீஷ்குமார் அவர்கள் இந்த ஒற்றை வழக்கை வைத்துக் கொண்டு உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என்று மாறி மாறி வழக்கு தொடர்ந்து எத்தனை முறை தான் கால அவகாசம் கேட்பீர்கள்? எத்தனை முறை தான் ஒரே வாதத்தை முன் வைப்பீர்கள் என்று கேட்ட நீதிபதி அவர்கள் அதிமுகவின் பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்து, ஹைகோர்ட் பிறப்பித்த உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதிக்கவில்லை. இதன் காரணமாக அதிமுக பெயர், சின்னம், லெட்டர்பேடு, கொடி போன்றவற்றை ஓபிஎஸ் தரப்பு பயன்படுத்த கூடாது என்று அதிரடியாக உத்தரவிட்டார்.
இந்த தீர்ப்பை சற்றும் எதிர்பார்க்காத ஓபிஎஸ் தரப்புக்கு இது பேரிடியாக வந்து விழுந்துள்ளது. ஏற்கனவே அதிமுக பொதுக்குழு தீர்மானத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் எடப்பாடியாருக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. அதன் பின்னர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கவச உடை தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் எடப்பாடியருக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. இந்நிலையில் தற்பொழுது அதிமுக கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை ஓபிஎஸ் பயன்படுத்தக் கூடாது என்று எடப்பாடியார் தரப்பில் தொடரப்பட்ட வழக்கிலும் அவருக்கு சாதகமாகவே தீர்ப்பு வந்திருப்பதால் ஓபிஎஸ்க்கு இடி மேல் இடியாக வந்து விழுந்து இருக்கிறது.
இதனால் ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர்கள் இனி ஓபிஎஸ் பக்கம் இருந்தால் ஒரு பயனும் இல்லை என்று இபிஎஸ் பக்கம் சாயத் தொடங்கி இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகிறது.
ஏற்கனவே பாஜக, திமுக உள்ளிட்ட கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் அதிமுகவில் வரும் நிலையில் தற்பொழுது ஓபிஎஸ் தரப்பினரும் அதிமுகவில் இணைந்து வருவதால் அதிமுக அதிக பலம் வாய்ந்த கட்சியாக உருவெடுத்து வருகிறது.