ரஜினியின் சர்ச்சைப் பேச்சு ! மீண்டும் பிரசுரமாகும் துக்ளக் 1971 ஆம் ஆண்டு பதிப்பு :குருமூர்த்தி தகவல் !
ரஜினி சேலத்தில் பெரியார் நடத்திய மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாடு பற்றி பேசி சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில் அந்த ஆண்டு வெளியான துக்ளக் பத்திரிக்கை மறு பிரசுரம் செய்யப்பட உள்ளதாக துக்ளக் ஆசிரியர் தெரிவித்துள்ளார்.
துக்ளக் 50 ஆவது ஆண்டுவிழாவில் பேசிய ரஜினி ‘சேலத்தில் 1971 ஆம் ஆண்டு பெரியார் நடத்திய ராமர் மற்றும் சீதை ஆகியோர்களின் சிலைகளை நிர்வாணமாக அழைத்துச் சென்றதாகவும் இருவருக்கும் செருப்பு மாலை போட்டார். அதைப்பற்றி அப்போது எந்த பத்திரிக்கையும் செய்தி வெளியிடவில்லை. துக்ளக்கில் சோதான் அட்டைப்படத்தில் செய்தி வெளியிட்டார். அதனால் திமுகவிற்கு அடுத்த தேர்தலில் பின்னடைவு ஏற்பட்டது.’ எனக் கூறி சர்ச்சைகளைக் கிளப்பினார்.
இதையடுத்து பெரியாரியவாதிகள் இதை ஆதாரப்பூர்வமாக மறுத்தனர். தவறான கருத்துகளைப் பரப்பிய ரஜினி மன்னிப்புக் கேட்கவேண்டும். இல்லையென்றால் அவர் வீடு முற்றுகையிடப்படும் என எச்சரிக்கை விடுத்தனர். ஆனால் ரஜினி தான் கேட்டவற்றையும் பத்திரிக்கைகளில் வந்தவற்றையும் வைத்துதான் பேசினேன் அதனால் மன்னிப்புக் கேட்க முடியாது எனக் கூறினார்.
இதற்கிடையில் 1971 ஆம் ஆண்டு சோ பத்திரிக்கையின் மீது நடந்த வழக்கில் அவர் கேட்ட செய்திகளை வைத்துதான் செய்தி வெளியிட்டோம். எனவே எங்களை மன்னித்து விடுங்கள் என சொல்லியதாக திமுக சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பேட்டியளித்துள்ளார்.
இந்த சர்ச்சைகள் எல்லாம் ஒருபுறம் ஓடிக் கொண்டிருக்க சர்ச்சைக்குக் காரணமான அந்த 1971 ஆம் ஆண்டு இதழை மறுபடியும் மீள்பிரசுரம் செய்ய இருப்பதாக துக்ளக்கின் தற்போதைய ஆசிரியர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார். இதனால் மீண்டும் சர்ச்சை வளர வாய்ப்பிருப்பதாகவே தெரிகிறது.