Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பக்தர்களுக்கு ஓர் நற்செய்தி!! தரிசனத்திற்கு இன்று முதல் முன்பதிவு..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு தரிசனத்திற்கான டிக்கெட்டுகளை, இன்று காலை 11 மணி முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக பக்தர்களுக்கு தரிசனம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த ஜூன் 11ஆம் தேதி முதல் சுவாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

இதனைத்தொடர்ந்து கோவில் அர்ச்சகர்கள், தேவஸ்தான ஊழியர்கள் என பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் அர்ச்சகர் ஒருவர் நோய்த் தொற்றால் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் சிறப்பு தரிசனத்திற்கு மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆனாலும் கோவிலில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போனதால் பக்தர்களுக்கு தரிசனம் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், செப்டம்பர் மாதத்திற்கான 300 ரூபாய்க்கான சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை இன்று காலை 11 மணி முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. மேலும், கொரோனா தொற்று பாதிப்பு இருப்பதால் நாளொன்றுக்கு 9,000 பக்தர்களுக்கு மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும் என தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 18 முதல் 27 வரை, பிரம்மோற்சவம் நடைபெற உள்ளதால், அந்த 10 நாட்களுக்கு சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Exit mobile version