திருப்பதி லட்டு விவகாரம் இந்திய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் அதைத் தொடர்ந்து பழனி பஞ்சாமிர்தத்திலும் மாட்டுக் கொழுப்பு கலந்திருக்கலாம் என்று பரவிய தகவலை அடுத்து தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஆந்திராவில் அமைந்துள்ள திருமலையில் திருப்பதி ஏழுமலையான் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்த லட்டுவில் மாட்டுக் கொழுப்பு கலந்திருப்பதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்கள் திடுக்கிடும் தகவல் ஒன்றை வெளியிட்டார். இவருடயை இந்த தகவல் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக்காலத்தில் ஜெகன் மோகன் ரெட்டி அவர்களின் தலைமையில் நடைபெற்ற ஆட்சியில் திருப்பதி லட்டுவில் விலங்குகளின் கொழுப்புகள் கலக்கப்பட்டது என்று கூறினார். மேலும் ஜெகன் மோகன் ரெட்டி அவர்கள் ஆட்சி செய்த 5 ஆண்டுகளில் திருப்பதியின் புனிதத்தை கெடுத்துவிட்டார் என்றும் குற்றம் சாட்டினார்.
இதையடுத்து முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்கள் வைத்த குற்றச்சாட்டை ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஒய்.வி சுப்பா ரெட்டி அவர்கள் மறுத்துள்ளார். மேலும் இது குறித்து ஒய்.வி சுப்பா ரெட்டி அவர்கள் முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்கள் அரசியலில் ஆதயம் பெற வேண்டும் என்று இதையெல்லாம் கூறுகின்றார்.
அவர் அதற்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் செல்வார். நானும் என்னுடைய குடும்பத்தை சேர்ந்தவர்களும் திருப்பதி லட்டு குறித்து ஏழுமலையான் முன் சத்தியம் செய்ய தயாராக இருக்கின்றோம். சத்தியம் செய்வோம். முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்கள் சத்தியம் செய்ய தயாராக இருக்கின்றாரா என்று கூறினார்.
இதையடுத்து தெலுங்கு தேச கட்சியை சேர்ந்த நிர்வாகி ஒருவர் திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தும் நெய்யை குஜராத்தில் உள்ள தேசிய கால்நடை ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி ஆய்வு மேற்கொள்ள வைத்தார். அந்த ஆய்வின் முடிவில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யில் பன்றி கொழுப்பு, மாட்டுக் கொழுப்பு, மீன் எண்ணெய் ஆகியவையும் சூரியகாந்தி எண்ணெய், பாமாயில், சோயா பீன் ஆகியவை கலந்திருப்பது தெரியவந்தது. தற்பொழுது நாடு முழுவதும் திருப்பதி லட்டு குறித்த பேச்சுதான் பரவலாக காணப்படுகின்றது. மேலும் ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிராக போராட்டங்கள் நடைபெறத் தொடங்கியுள்ளது.
இதையடுத்து திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யானது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏ.ஆர் டெய்ரி நிறுவனத்திடம் இருந்து வாங்கப்படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் குற்றம் சாட்டியிருத்தது. இதையடுத்து பழனி முருகன் கோயிலில் வழங்கப்படும் பஞ்சாமிர்தம் தயாரிக்கவும் ஏ. ஆர் டெய்ரி நிறுவனத்திடம் இருந்து நெய் வாங்கப்படுவதாக தகவல்கள் பரவத் தொடங்கியுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு குழு தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யில் மாட்டுக் கொழுப்பு கலந்திருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றது. அது முற்றிலும் வதந்தி.
பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யானது முழுக்க முழுக்க ஆவின் நிறுவனத்திடம் இருந்து தான் வாங்கி வருகின்றோம். திருப்பதி லட்டு தொடர்பான பிரச்சனையில் சிக்கி இருக்கும் ஏ.ஆர் டெய்ரி நிறுவனத்திடம் இருந்து இது வரை நெய் கொள்முதல் செய்யப்படவில்லை. இது முழுக்க முழுக்க தவறான செய்தி ஆகும் என்று கூறியுள்ளது.