Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

திருப்பதி கோவில் மூடப்படுகிறதா?? தேவஸ்தானம் அளித்த தகவல்!

திருப்பதி கோவில் மூடப்படுகிறதா?? தேவஸ்தானம் அளித்த தகவல்!

திருப்பதி ஏழுமலையான் கோவில் மூடப்படுவதாக இணையதளத்தில் வெளிவந்த தகவலை அடுத்து தேவஸ்தானம் அதற்கான விளக்கத்தை அளித்துள்ளது.

அடுத்த ஆண்டு 2023 மார்ச் 1ஆம் தேதி முதல் திருப்பதி ஏழுமலையான் கோவில் தங்க கோபுரத்திற்கு பொன் மூலம் பூசப்பட்ட தகடுகள் பொருத்தும் பணி துவங்க இருக்கிறது. இந்த பணியானது முடிவதற்கு ஆறு மாத கால அவகாசம் தேவைப்படும் என திருப்பதி தேவஸ்தானம் தரப்பில் கூறப்பட்டிருந்தது.

இதனையடுத்து தங்கத் தகடுகள் பொருத்தப்படும் ஆறு மாத காலமும் திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை மூடப்படும் என சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது. இதனை அறிந்த தேவஸ்தானம் அதனை மறுத்து கண்டனம் தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து திருப்பதி ஏழுமலையான் கோவில் தலைமை அர்ச்சகர்களில் ஒருவரான வேணுகோபால தீட்சததுலு கூறிய தகவலை ஒரு அறிக்கையாக தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.

அதில் புதிதாக பொன் மூலம் பூசப்பட்ட தகடுகள் பொருத்தும் போது பாலாலயம் செய்யப்படும் அப்போது வேற ஒரு மூலவரை ஏற்பாடு செய்யும் பணிகள் நடைபெறும். எனவே அந்த சமயத்தில் திருமலைக்கு வரும் பக்தர்கள் தற்போது இருக்கும் மூலவரையும் வழிபடலாம். புதிதாக பாலாலயம் செய்யப்பட்டு பிரதிஷ்டை செய்யப்படும் மூலவரையும் வழிபடலாம்.

மூலவருக்கு நடைபெறும் கட்டண சேவைகள் அனைத்தும் சரியாக நடைபெறும். மேலும் உற்சவருக்கு நடைபெறும் கல்யாண உற்சவம் மற்றும் கட்டண பிரமோற்சவம் உள்ளிட்ட கட்டண சேவைகளில் மாற்றம் எதுவும் இருக்காது என தேவஸ்தானம் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு முன் 1957- 58 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் புதிதாக பொன் தகடுகள் பொருத்தப்பட்ட போதும் இதே போல் பாலாலயம் செய்யப்பட்ட போதும் இதே நடைமுறை பின்பற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version