Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

காப்பீட்டு தொகையை தராமல் இழுத்தடித்த தனியார் மருத்துவமனை மீது பெண் புகார்

காப்பீட்டு தொகையை தராமல் இழுத்தடித்த தனியார் மருத்துவமனை மீது பெண் புகார்

காப்பீட்டு தொகை வரும் முன்பே பணத்தை வாங்கி கொண்டு காப்பீடு தொகை வந்தவுடன் வாங்கிய பணத்தை கொடுக்க மறுக்கும் தனியார் மருத்துவமனை மீது கையில் கட்டுடன் மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் பெண் ஒருவர் புகார் கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே சோத்தக்குடியை சேர்ந்தவர் குமரகுரு. இவரது மனைவி கஸ்தூரி. குமரகுரு அரசு பேருந்து ஓட்டுனராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் குமரகுருவுக்கு தினசரி அவரது மனைவி கஸ்தூரி தனது வீட்டில் இருந்து சன்னாநல்லூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்று மதிய சாப்பாடு கொடுத்து வருவார்.

அந்த வகையில் கடந்த 21 ஆம் தேதி மதிய சாப்பாடு கொடுத்து விட்டு வந்து கொண்டிருந்த போது பின்புறம் வந்த இருசக்கர வாகனம் இவரது பைக் மீது மோதியதில் விபத்துக்குள்ளாகி அவரது வலது கை முறிந்தது. உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அதனைத் தொடர்ந்து கடந்த 23 ஆம் தேதியன்று தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொள்வதாக கூறிவிட்டு அங்கிருந்து திருவாரூரில் உள்ள டி.எம்.சி தனியார் மருத்துவமனையில் கஸ்தூரி அனுமதிக்கப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து அரசு ஊழியருக்கான மருத்துவ காப்பீடு (NEW HEALTH) உள்ளதால் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்றுக் கொள்வதற்கு தனியார் மருத்துவமனையிடம் விண்ணப்பித்தார்.

காப்பீடுத் தொகை வருவதற்கு ஓரிரு நாட்கள் ஆகும் என்பதால், மருத்துவமனை நிர்வாகத்தின் அறிவுறுத்தல்படி முன் தொகையாக ரூ. 45 ஆயிரம் ரூபாய் செலுத்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து அறை வாடகை மருந்து மாத்திரை என 20,000 ரூபாய் கட்டியுள்ளனர். இதில் 20,000 ரூபாய்க்கு மட்டும் மருத்துவமனை தரப்பில் பில் கொடுத்ததாக கூறப்படுகிறது. மூன்று நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 26 ஆம் தேதி இரவு 8 மணிக்கு ரூ.67, 140 காப்பீடு நிறுவனத்தில் இருந்து டி.எம்சி மருத்துவமனைக்கு செலவுத் தொகையாக வரவு வைக்கப்பட்டுள்ளது. தாங்கள் ஏற்கனவே பணம் கட்டிய நிலையில் காப்பீட்டு தொகையை தங்களுக்கு தர வேண்டும் என கேட்டதற்கு காப்பீட்டு நிறுவனத்தில் இருந்து பணம் வரவில்லை எனக் கூறி அலைக்கழித்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் மருத்துவமனை தரப்பில் பேசியவர்கள் வேண்டுமென்றால் 18,000 ரூபாயை வாங்கி கொண்டு பிரச்சனை செய்யாமல் சென்று விடுமாறு பேரம் பேசியதாக குமரக்குரு குற்றம் சாட்டுகிறார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் நேரடி விசாரணை நடத்தி உரிய தொகையை பெற்றுக் கொடுக்க வேண்டும் என விபத்துக்குள்ளான கஸ்தூரி தனது கணவருடன் வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.

Exit mobile version