அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அரசின் மீட்புப் பணியை திமுக தலைவர் ஸ்டாலின் குறை கூறி வருகிறார்-தமாகா இளைஞரணித் தலைவர் எம்.யுவராஜா

0
108
TMC Youth Wing Leader Yuvaraj Criticise DMK Leader MK Stalin-News4 Tamil Latest Online Tamil News Today

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அரசின் மீட்புப் பணியை திமுக தலைவர் ஸ்டாலின் குறை கூறி வருகிறார்-தமாகா இளைஞரணித் தலைவர் எம்.யுவராஜா

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, அரசின் மீட்புப் பணியை திமுக தலைவர் ஸ்டாலின் குறை கூறி வருகிறார் என தமாகா இளைஞரணித் தலைவர் எம்.யுவராஜா குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, திருச்சி மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றுக்குள் இரண்டு வயது சுஜித் வில்சன் தவறி விழுந்த செய்தி அறிந்ததும் குழந்தை சுஜித்தை பாதுகாப்பாக மீட்பதற்காக தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. ஆனால் அனைத்து நடவடிக்கைகளும் பலன் அளிக்காமல் போனது துரதிர்ஷ்டவசமானது.

அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள், இரவு பகலாக, மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். கடினமான பாறைகள் இருந்ததால், மீட்புப் பணிகளில், பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டன. அவற்றை வல்லுநர் குழு உதவியுடன் சரி சரிசெய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும், சிறுவனைக் காப்பாற்ற முடியாமல், சடலமாக மீட்கப்பட்ட செய்தி, மிகுந்த மன வேதனையை அளித்தது.

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, அரசின் மீட்புப் பணியை திமுக தலைவர் ஸ்டாலின் குறை கூறி வருகிறார். ஆழ்துளைக் கிணற்றில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் அந்தக் குழந்தையை உயிருடன் மீட்க கிடைத்த நேரங்களில் எல்லாம் மொத்தமாக வீணடிக்கப்பட்டது என்றும் மீட்பு நடவடிக்கை குறித்து அனுபவம் வாய்ந்தவர்களை அழைத்துப் பேசி ஒரு வியூகம் வகுக்கப்படவில்லை என்றும் சில அமைச்சர்கள் சம்பவ இடத்தில் நின்றுகொண்டு மீட்புப் பணிகளில் குறுக்கிட்டுக் கொண்டிருந்ததையும் தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சியில் காண முடிந்தது என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். மேலும், சுஜித்தை மீட்க ராணுவம் அல்லது துணை ராணுவத்தை ஏன் முன்கூட்டியே அழைக்கவில்லை என்றும் சுஜித்தைக் காப்பாற்ற முடியாத அரசு தமிழக மக்களை எப்படி காப்பாற்றப் போகிறது என்றும் கேள்விகள் எழுப்பியுள்ளார்.

* தமாகா இளைஞரணி சார்பாக நான் உங்களிடம் கேட்டுக் கொள்வதெல்லாம் சிறுவன் விழுந்த நான்கு நாட்களில், அரசினுடைய செயல்பாடுகளையும், மீட்புக் குழுவினருடைய செயல்பாடுகளையும் குறை கூற முடியாத எதிர்க்கட்சித் தலைவர் ஏன் குழந்தை துரதிர்ஷ்டவிதமாக மீட்கப்படாத போது கற்பனை கலந்த புகாரை முன் வைக்கிறீர்கள்?

* தமிழ் தமிழ் என்று உச்சரிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் தமிழக காவல்துறை, தமிழக தீயணைப்புத் துறை மற்றும் தமிழக வல்லுநர்களையும் நம்பாதது வியப்பாக உள்ளது.

* மேலும் ஏன் ராணுவத்தையும், துணை ராணுவத்தையும் அழைக்கவில்லை என்று கேட்கிறீர்கள்? சென்னை வெள்ளப்பெருக்கு, ஒக்கி புயல், கஜா புயல் மற்றும் பல ஆபத்தான காலகட்டங்களில் NDRF மற்றும் SDRF வீரர்கள் தனது உயிரைப் பணையம் வைத்து மக்களைக் காப்பாற்றினார்கள் என்பது நாடறிந்த விஷயம். அப்படிப்பட்ட பேரிடர் மீட்புக் குழுவினர் மீது சந்தேகப்படலாமா?

* மீட்பு நடவடிக்கையின் போது ஒவ்வொரு கட்டத்திலும் தொழில்நுட்ப வல்லுநர்களை அணுகித்தான் மீட்பு நடவடிக்கை நடைபெற்றது. இதை அனைத்து தொலைக்காட்சிகளும் 15 நிமிடங்களுக்கு ஒரு முறை தெளிவாக எடுத்து வைத்துக் கொண்டிருந்தது. அப்படி என்றால் இங்கு உள்ள தொழில் நுட்ப வல்லுநர்கள் யாரும் சிறந்தவர்கள் இல்லையா?

* நீங்கள் பல ஆண்டுகால ஆட்சியில் துணை முதல்வராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும், பல்வேறு துறைகளில் அமைச்சராகவும் பொறுப்பு வகித்தீர்கள். அப்போது தங்கள் ஆட்சிக் காலத்திலிருந்து இன்றுவரை தொழில்நுட்ப வல்லுநர்கள் தமிழகத்தில் கிடையாதா? அதை நீங்கள் உருவாக்கவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா? இது போல் பல்வேறு விஷயங்கள் தங்கள் பேட்டியின் போது வெளிப்படுகின்றன.

நாங்கள் எதிர்க்கட்சித் தலைவரைக் கேட்டுக்கொள்வது பல அறிஞர்களையும் வல்லுநர்களையும், அரசியல் தலைவர்களையும் உருவாக்கியது தமிழகம். நீங்கள் அரசியலில் ஆளும் கட்சியைக் குறைகூறுவது சகஜம் தான். ஆனால் ஒரு போதும் நமது வல்லுநர்களைக் குறை கூறாதீர்கள்.

மேலும் எதிர்க்கட்சித் தலைவர் என்பவர் அண்டை மாநிலம் போல மக்களுக்கு ஆபத்து ஏற்படும் போது ஆளும் கட்சியோடு சேர்ந்து மக்களைக் காப்பாற்றும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டுமே தவிர குறை சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது. எனவே மரியாதைக்குரிய திமுக தலைவர் ஸ்டாலின் இனி வரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகளைத் தவிர்த்து மக்களுக்கு நல்லது எது என்று ஆராய்ந்து செயல்பட வேண்டும் என்றும் யுவராஜா தெரிவித்துள்ளார்.