தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 21 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கும் என பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த மே 11-ஆம் தேதி தொடங்கி 2 நாட்கள் நடைபெற்றது. அப்போது அவைத்தலைவர் தேர்வு நடைபெற்றது. இதில் அப்பாவு போட்டியின்றி அவைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதால் அன்றைய தினமே அவர் பதவி ஏற்றார். கொரோனா பரவல் காரணமாக அவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
கொரோனா பரவலை தடுக்க தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 14-ந்தேதி வரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் ஸ்டாலின், பேரவைத் தலைவர் அப்பாவு ஆகியோர் நேற்று மாலை சந்தித்துப் பேசினார்.
அப்போது, அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், 16 ஆவது சட்டப்பேரவையை கூட்டுவது தொடர்பாகவும் ஆளுநருடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பேரவைத் தலைவர் அப்பாவு, வரும் 21 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கும் என்றார்.
கொரோனா பாதிப்பு இன்னும் குறையாமல் இருப்பதால், இந்தக் கூட்டத் தொடர் முழுவதும் கலைவாணர் அரங்கத்திலேயே நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார். கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து அலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவு செய்யும் என்றும் அவர் கூறினார்.
முந்தைய அதிமுக அரசு இடைக்கால நிநிநிலை அறிக்கை தாக்கல் செய்திருந்த நிலையில், புதிதாக ஆட்சி அமைத்துள்ள திமுக அரசு முழு நிதிநிலை அறிக்கையை ஆகஸ்ட் மாதத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.