இனி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கிடையாது.. இ-பாஸ் ரத்து.. போக்குவரத்திற்கு அனுமதி..!! தமிழக அரசு!

0
128

தமிழகத்தில் இனி ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கிடையாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதில் படிப்படியாக சில தளர்வுகளை மத்திய மற்றும் மாநில அரசு அவ்வபோது அறிவித்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் செப்டம்பர் 30-ம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழகத்தில் செப்டம்பர் 01-ம் தேதி முதல் இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்படுவதாகவும், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் வகையில் மாவட்டங்கள் இடையே செல்ல இ-பாஸ் தேவையில்லை என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்குள் வருவோர் இ-பாஸ் பெற்று வரவேண்டும் என தமிழக அரசு கூறியுள்ளது.

ஒவ்வொரு ஞாயிற்றுகிழமைகளிலும் அமல்படுத்தப்பட்டிருந்த முழு ஊரடங்கு ரத்து செய்யப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால் இன்று கடைபிடிக்கப்படும் பொது முடக்கமே கடைசியாகும்.

சென்னை உட்பட தமிழகம் முழுவதும் செப்டம்பர் 01-ம் தேதி முதல் மாவட்டத்திற்குள் பொது மற்றும் தனியார் போக்குவரத்திற்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுடன் அனுமதி அளித்துள்ளது.

மேலும், செப்டம்பர் 07-ம் தேதி முதல் மெட்ரோ ரயில் சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் செயல்பட தடை தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

வணிக வளாகங்கள், ஷோ ரூம்கள் 100 சதவிகித பணியாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதே போல, தமிழகம் முழுவதும் உள்ள அத்தியாவசிய கடைகள் உட்பட அனைத்து கடைகளும் இரவு 8 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கோவில்கள் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டு தலங்களையும் இரவு 8 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.