தமிழகத்தில் கிடுகிடுவென உயர்ந்து வரும் கொரோனா தொற்றைக் தடுப்பது குறித்து தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், மருத்துவ நிபுணர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை முதன்மைச் செயலாளர், சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர், தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழக மேலாண்மை இயக்குநர் பேரிடர் மேலாண்மை ஆணையர், மருத்துவக் கல்வி இயக்குநர் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
RT-PCR பரிசோதனைகள் நாளொன்றுக்கு 50,000லிருந்து 75,000 என அதிகரிக்கப்பட்டுள்ளது, நோய் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கூடுதலாகவும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், நோய்த் தொற்று ஏற்பட்டவரின் உடனிருப்பவர்கள் மற்றும் தொடர்பில் உள்ளவர்களை உடனுக்குடன் கண்டறியப்பட்டுபரிசோதனை மேற்கொள்வது உள்ளிட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பொது இடங்களில் முகக்கவசம் அணிவது மற்றும் கோவிட் தவிர்க்கும் பழக்கங்கள் பின்பற்றுவது முற்றிலும் குறைந்துள்ளது. இதுவே கோவிட் மீண்டும் அதிகரிப்பதற்கு மிக முக்கிய காரணம் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த கூட்டத்திற்கு பிறகு தமிழக அரசு சார்பில் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.
பள்ளிக் கல்வித் துறை மற்றும் உயர்கல்வித் துறையால் வெளியிடப்பட்டுள்ள இணையவழி / டிஜிட்டல் வகுப்புகளுக்கான ஆைைணகளைத் தொடர்ந்து மருத்துவம், செவிலியம், விவசாயம் கால்நடை, சட்டம் மற்றும் இதர படிப்புகளைப் பொறுத்தமட்டில், இறுதி ஆண்டு பயிலும் மாணவர்கள் தவிர இறுதி ஆண்டிற்கு முன் பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் இணையவழி முறையில் வகுப்புகள் நடத்த முடிவெடுக்கப்பட்டது ஏதேனும் தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தால் நிலையான வழிமுறைகளை கடைபிடித்து அந்தந்த பல்கலைக்கழகங்களின் முடிவிற்கு ஏற்ப 31.3.2021-க்குள் தேர்வுகள் நடத்தி முடிக்கவேண்டும்.
உள் அரங்குகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் 50 விழுக்காடு இடங்களுக்கு மிகாமல் அல்லது அதிகபட்சமாக 600 நபர்களுக்கு மிகாமல் நிலையான வழிமுறைகளை கண்டிப்பாக கடைபிடித்து நிகழ்ச்சிகள் கூட்டங்கள் நடத்தப்படவேண்டும். இதனை உறுதி செய்யத் தவறினாலோ அல்லது மீறினாலோ நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்கள் மற்றும் உள்ளரங்கு உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
தொழிற்சாலைகள், அலுவலகங்கள், கணினி சார்ந்த அலுவலங்களில் பணிபுரியும் 100 விழுக்காடு தொழிலாளர்கள் / அலுவலர்கள் வகுக்கப்பட்ட நிலையான வழிகாட்டி நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்றவேண்டும் என்றும் அனுமதிக்கப்பட்ட வயதுவரம்பிற்கு ஏற்றவாறு தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர ஊக்குவிக்க வேண்டும்.
பேருந்துகள் மற்றும் பொதுப்போக்குவரத்துகளில் பயணம் செய்வோர் முகக்கவசம் கட்டாயம் அணியவேண்டும். இதனை பொதுப் போக்குவரத்து நடத்தும் கண்காணிக்கவேண்டும்.
வணிக வளாகங்களில் உள்ள உணவுக் கூடங்கள், திரையரங்குகளுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தளர்வின்றி பின்பற்றவேண்டும். இந்த தொற்று அதிகரித்து வரும் வேளையில் இதில் ஏதேனும் விதி மீறல்கள் காணப்பட்டால், கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க நேரிடும்
மக்கள் அதிகம் கூடும் இடங்களான சந்தைகள், தொழிற்சாலைகள், கூட்டங்கள் நடைபெறும் இடங்கள் போன்ற பகுதிகளில் நோய்த் தொற்று பரவாமல் இருக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை தீவிரப் படுத்தவும் இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
“நடமாடும் மாதிரி சேகரிக்கும் மையங்கள்” அமைக்கவும், மாவட்டங்களில் “கோவிட் கவனிப்பு மையங்கள்”அமைக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதிக பாதிப்புகள் உள்ள மாவட்டங்கள்/மாநகரங்கள் மற்றும் பகுதிகளில் மத்திய அரசின் விதிகளுக்கு உட்பட்டு தடுப்பூசி போடுவதை தீவிரப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பொது இடங்களிலும், அனுமதிக்கப்பட்ட பணியிடங்களிலும் முகக்கவசம் அணியாதது மற்றும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக பின்பற்றாதது ஆகியவை தொடர்ந்தால் நமது மாநிலத்திலும் நோய்த் தொற்று தாக்கத்தின் அளவு உயரக்கூடிய நிலை ஏற்படும் என்றும், இதனைத் தவிர்க்க முகக்கவசம் அணிவது, கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது மற்றும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிப்பதை தாமாக முன்வந்து பின்பற்றுவதே இதற்கான தீர்வு என தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.