இன்று முதல் ரூ. 45 க்கு விற்கப்படும் வெங்காயம்..! தமிழக அரசின் புதிய ஏற்பாடு!

0
133

பண்ணை பசுமைக் கடைகளில் வெங்காயம் ஒரு கிலோ 45 ரூபாய்க்கு இன்று முதல் விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழகத்திற்கு கா்நாடகம், ஆந்திரா, மராட்டியம் போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்படுகிறது. ஆனால், தற்போது அங்கு பெய்து வரும் தொடர்மழை காரணமாக வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களாகவே வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. தற்போது உள்ள சூழலில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் 100 ரூபாயை தாண்டியுள்ளது. இதனால் நடுத்தர மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பண்டிகை காலங்களில் வெங்காயத்தின் தேவை அதிகரிக்கும் என்பதாலும், மக்களின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டும் ஒரு கிலோ வெங்காயம் 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் நடந்த கூட்டத்தில் இது குறித்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி மாநகராட்சி பகுதிகளில் உள்ள பசுமை பண்ணை கடைகளில் இன்று முதல் ஒரு கிலோ வெங்காயம் 45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும். தேவை மற்றும் வரத்து அடிப்படையில் வெங்காய விலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இன்றி கூட்டுறவுத் துறை சார்பில் வழங்க, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.