Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பத்தாம் வகுப்பு பொது தேர்வு விவகாரம் – கையிலெடுக்கும் எதிர்கட்சிகள்

வரும் ஜூன் 15ம் தேதி முதல் 10,11 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வுகளை நடத்த திட்டமிட்டு அதற்கான வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது தமிழக அரசு.

இது தொடர்பாக ஆசியர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில் நீதி மன்றம் கொரோனா தீவிரமடைந்து வரும் இந்நிலையில் இந்த தேர்வு அவசியமா? என கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் இது குறித்து விரைந்து முடிவெடுக்குமாறு கூறி அவகாசமளித்துள்ளது.

அரசின் தேர்வு முடிவு குறித்து பொது மக்கள், சமூக ஆர்வலர்கள் என அனைவரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில் இதனை கையிலெடுத்துள்ளன எதிர்கட்சிகள். அரசின் தேர்வு நடத்தும் முடிவை கண்டித்து வரும் ஜூன் 10ம் தேதியன்று கண்டன ஆர்பாட்டம் நடைபெறும் என திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது.

அனைத்துக் கட்சித் தலைவர்களின் வேண்டுகோள்

“கொரோனா என்ற கொடிய நோய்த் தொற்றால் தமிழகம் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. மார்ச் மாதம் 25-ம் தேதி அறிவிக்கப்பட்ட ஊரடங்கு, 68 நாட்கள் கடந்துவிட்ட நிலையில், ஜூன் மாதம் 30-ம் தேதி வரைக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகும் நோய்த்தொற்று குறையும் என்று நம்ப முடியாத அளவுக்கு, தினந்தோறும் 1500-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதுவரை 33 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டும், 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும், பேரழிவைச் சந்தித்து வருகிறது தமிழகம்.

மருத்துவ நிபுணர்கள், அடுத்த இரண்டு மாத காலத்தில் நோய்த்தொற்று மேலும் அதிகமாகப் பரவும் என்று எச்சரிக்கை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் வழக்கம்போல் கொரோனா தொற்றின் உண்மை நிலையை மறைத்தும், தரவுகளைத் திரித்தும், அலட்சியமாகவும், அ.தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது. நோய்ப்பரவல் அதிகமான நிலையில் ஊரடங்கைத் தளர்த்தியும், மதுபானக் கடைகளைத் திறந்தும், கடமை தவறிச் செயல்பட்ட தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தனது அடுத்த கட்ட தவறான செய்கையாக, பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை நடத்தியே தீருவேன் என்று வறட்டுப் பிடிவாதம் பிடித்து வருகிறார்.

ஒன்பது லட்சம் மாணவர்கள் வீட்டை விட்டு வெளியில் வந்து தேர்வுகள் எழுதியாக வேண்டும். இதனால் அவர்களது பெற்றோர்களும் லட்சக்கணக்கில் வெளியில் வந்தாக வேண்டும். 3 லட்சம் ஆசிரியர்களும், பல இலட்சம் ஊழியர்களும் பணிக்கு வந்தாக வேண்டும். இதைப் பற்றிய கவலையே தமிழக அரசுக்குக் கிஞ்சித்தும் இல்லை.

மேலும், இந்த கொரோனா நோய்த் தொற்றால் சிறுவர்கள், சிறுமியர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். யாரையும் வெளியில் வர வேண்டாம் என்று சொல்லும் அரசாங்கமே, தேர்வு என்று கட்டாயமாகத் திணித்து, அவர்களை லட்சக்கணக்கில் வெளியில் வர வைப்பது ஏன்? இவர்களது உயிருக்கு என்ன உத்தரவாதம் இந்த அரசாங்கத்தால் தரமுடியும்?

காய்ச்சல் இருக்கும் மாணவர்கள் தனியாக உட்கார்ந்து தேர்வு எழுதவேண்டும் என்று சொன்னதைப் போன்ற இரக்கமற்ற செயல் வேறு என்ன இருக்க முடியும்? இது மாணவர் சமுதாயத்தின் மீது நடத்தப்படும் மாபெரும் கொடுமை. ஏதோ தன்னைச் சர்வாதிகாரி போல நினைத்து எடப்பாடி பழனிசாமி நடந்து கொள்கிறார்.

தேர்வைத் தள்ளி வையுங்கள் என்று அரசியல் இயக்கங்கள் கேட்டது மட்டுமல்ல; பெற்றோர்கள் வீடியோக்களில் கதறுகிறார்கள். ஆசிரியர் சங்கமும் உயர்நீதிமன்றம் சென்றுள்ளது. ‘இந்த நேரத்தில் தேர்வு நடத்துவதற்கு என்ன அவசியம்?’ என்று நீதிமன்றமும் கேட்டுள்ளது. ஆனாலும் ஆணவம் பிடித்த எடப்பாடி பழனிசாமி அரசுக்கு இரக்கம் ஏற்படவில்லை; ஈரம் கசியவில்லை.

இந்தச் சூழலில் லட்சக்கணக்கான மாணவ, மாணவியரைக் காக்கும் முயற்சியாக போராட்டம் நடத்தும் நிலைமையை அரசே ஏற்படுத்தி விட்டது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை அரசு தற்போதைக்கு நிறுத்தக் கோரியும், கொரோனா தொற்று முழுமையாகக் குறைந்தப் பிறகு பெற்றோர் – ஆசிரியருடன் கலந்தாலோசனை செய்து தேர்வுத் தேதியை குறிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், கண்டன ஆர்ப்பாட்டத்தை 10.06.2020-ம் நாள் காலை 10 மணிக்கு நடத்துவது என்று முடிவெடுத்துள்ளோம்.

“பத்தாம் வகுப்புத் தேர்வை நிறுத்து! கொரோனா காலத்தில் தேர்வுகள் எதற்கு?”

“விளையாடாதே விளையாடாதே! மாணவர்கள் உயிரோடு விளையாடாதே!”

“கொரோனாவை நிறுத்து! அப்புறம் தேர்வை நடத்து!”

“இன்னுமா வரவில்லை இரக்கம்? தேர்வை ரத்து செய்ய ஏன் தயக்கம்?”

என்ற முழக்கங்களை நாடு முழுவதும் எழுப்பி எதிரொலித்திடச் செய்வோம்.

லட்சக்கணக்கான மாணவ, மாணவியரின் எதிர்காலத்துக்காக நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்துக் கட்சியினர், பொதுமக்கள், இளைஞர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்துகொள்ளக் கேட்டுக் கொள்கிறோம். அவரவர் இல்லத்தின் முன்பு ஐந்து பேர் கூடி, தனிமனித இடைவெளியைப் பின்பற்றியும், கொரோனா தடுப்பு உபகரணங்களை அணிந்து கொண்டும் முழக்கங்களை எழுப்புமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

இரக்கமற்ற அரசின் இதயத்தை வேகமாகத் தட்டி எழுப்புவதாக இந்த ஆர்ப்பாட்டம் அமைய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம். தேர்வை விட உயிர் முக்கியம் என்பதை இந்த அரசுக்கு உணர்த்துவோம். அ.தி.மு.க. அரசின் அரசியல் சித்துவிளையாட்டில் இருந்து லட்சக்கணக்கான மாணவ – மாணவியரைக் காப்போம்!
அறிவிப்பு வெளியிடுவோர் :

1) மு.க.ஸ்டாலின், தலைவர், திராவிட முன்னேற்றக் கழகம்

2) ஆசிரியர் கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம்

3) கே.எஸ்.அழகிரி, தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி

4) வைகோ, பொதுச் செயலாளர், ம.தி.மு.க.

5) கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

6) இரா.முத்தரசன், மாநிலச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

7) பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீன், தேசியத் தலைவர், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்

8) தொல்.திருமாவளவன், தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

9) எம்.எச்.ஜவாஹிருல்லா, தலைவர், மனித நேய மக்கள் கட்சி

10) ஈ.ஆர்.ஈஸ்வரன், பொதுச் செயலாளர், கொங்கு மக்கள் தேசியக் கட்சி

11) ரவி பச்சமுத்து, தலைவர், இந்திய ஜனநாயகக் கட்சி

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version