எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் போது ஒரு பேச்சு முதல்வராகிய பிறகு ஒரு பேச்சா – மக்கள் மத்தியில் எழுந்த விமர்சனம்
தமிழகத்தில் ஆட்சியை பிடித்த திமுக தேர்தல் நேரத்தில் அளித்த ஒரு சில வாக்குறுதிகளை நிறைவேற்றினாலும் முக்கியமான பல தேர்தல் வாக்குறுதி குறித்து எதுவும் அறிவிக்காமல் மௌனம் காப்பது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் கிராம சபை கூட்டம் ரத்து என தமிழக அரசு அறிவித்துள்ளது குறித்து மக்கள் மத்தியில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது தமிழ் நாட்டில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அச்சுறுத்தல் நீடித்து வரும் நிலையில் மக்கள் கூட்டம் கூடுவதால் கொரோனா தொற்று மேலும் பரவலாம் என்பதை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அந்தவகையில் சுதந்திர தினத்தன்று கிராம சபை கூட்டங்களை நடத்த வேண்டாம் என தமிழ்நாடு அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் இதுதொடர்பாக, கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வழங்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் பஞ்சாயத்துராஜ் இயக்குநர் பிரவீன் நாயர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வழக்கமாக தமிழகத்தில் ஜனவரி 26,மே 1,ஆகஸ்ட் 15 மற்றும் அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் கிராம சபை கூட்டம் நடத்தப்படும்.அந்தவகையில் கடந்த ஆண்டு அதிமுக ஆட்சியின் போது ஜனவரி 26 இல் மட்டுமே கிராமசபை கூட்டம் நடத்தப்பட்டது.அதன் பிறகு அக்டோபர் 2 ஆம் தேதி முன்னெச்சரிக்கை நிபந்தனைகளுடன் கிராமசபை கூட்டம் நடத்தலாம் என்று அறிவிக்கப்பட்டது.ஆனால் இறுதி நேரத்தில் அந்த கூட்டமும் தடை செய்யப்பட்டது.
இதனையடுத்து அப்போதைய எதிர்க்கட்சியான திமுக அதிமுக அரசை விமர்சித்து வந்தது.அதனைத்தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் திமுக சார்பாக மாதிரி கிராமசபை கூட்டமும் நடத்தப்பட்டது.அப்போது கொரோனா தீவிரமாக பரவி வந்த போதிலும் ஆளும் அரசை எதிர்த்து மாதிரி கிராமசபை கூட்டம் நடத்தப்பட்டது.
ஆனால் தற்போது ஆட்சிக்கு வந்த திமுக கொரோனா பாதிப்பு பெருமளவு குறைந்துள்ள நிலையில் கிராமசபை கூட்டத்தை நடத்தாதது ஏன்? இதற்கு கொரோனா அச்சம் மட்டுமே காரணமா? அல்லது வேறு எதாவது உள்நோக்கம் உள்ளதா? என பலவிதங்களில் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
குறிப்பாக இவ்வாறு நடக்கும் இந்த கிராமசபை கூட்டங்களில் கிராம மக்கள் அனைவரும் கலந்து கொள்வார்கள். சம்பந்தப்பட்ட ஊராட்சியின் முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்குவது, அடுத்து செய்யவுள்ள மேம்பாட்டு திட்டங்கள் மற்றும் ஊராட்சியின் செயல்பாடுகள் குறித்து விவாதிப்பது, முந்தைய ஆண்டின் வரவு-செலவு கணக்குகளை சமர்ப்பித்தல் போன்ற பல முக்கிய அம்சங்கள் குறித்த விவாதங்கள் இதில் நடைபெறும்.
மேலும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கக்கூடிய பல முக்கிய தீர்மானங்களும் இந்த கிராம சபை கூட்டத்தின்போது நிறைவேற்றப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்தை திமுக தன்னுடைய அரசியலுக்காக பயன்படுத்தி கொண்டதா? எதிர்க்கட்சியாக இருந்த போது ஒரு பேச்சும்,ஆட்சியை பிடித்து முதல்வரான பின்னர் ஒரு பேச்சுமாக தமிழக முதல்வர் நடந்து கொள்வதாக தமிழக மக்கள் விமர்சித்து வருகின்றனர்.