ஆளும் மத்திய அரசு மும்மொழிக்கொள்கையை தமிழகத்தில் கொண்டு வர வேண்டும் என ஆசைப்படுகிறது. ஆனால், ஏற்கனவே இங்கு இரு மொழிக்கொள்கை நடைமுறையில் இருக்கிறது. இது அறிஞர் அண்ணா கொண்டு வந்தது. அதாவது தாய் மொழியான தமிழ் பேசும் மொழியாகவும், பள்ளிகளில் 2வது பாடமாக ஆங்கிலமும் இருக்கிறது. உலகம் முழுவதும் ஆங்கிலம் இருப்பதால் இருமொழிக்கொள்கையில் ஆங்கிலத்தை கொண்டு வந்தார் அறிஞர் அண்ணா.
அவர் உருவாக்கிய திராவிட முன்னேற்றக் கழகமும் அதை பின்பற்றி வருகிறது. திமுகவிலிருந்து பிரிந்தே அதிமுக உருவானதால் அவர்கள் ஆட்சியில் இருக்கும்போதும் இதையே பின்பற்றினார்கள். தமிழகத்தில் திமுக, அதிமுக என இந்த இரண்டு கட்சிகள் மட்டுமே மாறி மாறி ஆட்சி அமைப்பதால் மும்மொழிக்கொள்கையை பாஜக அரசால் இங்கே கொண்டு வரமுடியவில்லை.
கடந்த 10 வருடமாக பாஜக ஆட்சியில் இருந்தது. கடந்த பாராளுமன்ற தேர்தலிலும் பாஜகவே வென்றது எனவே, இந்த முறை எப்படியாவது தமிழகத்தில் ஹிந்தி மொழியை கொண்டு வரவேண்டும் என அவர்கள் ஆசைப்படுகிறார்கள். தமிழும், ஆங்கிலமும் இருக்கட்டும், மூன்றாவது மொழியாக ஹிந்தி இருக்கட்டும் என அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், ஆளும் திமுக அரசு அதை கடுமையாக எதிர்க்கிறது.
இந்தி எதிர்ப்பு போராட்டம் செய்த கட்சியாக திமுக இருப்பதால் இப்போதும் இது தொடர்கிறது. இந்நிலையில், மும்மொழிக்கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து போராட்டம் நடத்துவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று அறிவித்தார். அதன்படி சென்னை எம்.ஜி.ஆர் நகரில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் மும்மொழிக்கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து போராட்டம் நடத்தினர். இதையடுத்து, அனுமதியின்றி போராட்டம் நடத்தியதற்காக தமிழிசையை போலீசார் கைது செய்து வேனில் அழைத்து சென்றனர். அவருடன் பாஜக தொண்டர்களும் கைது செய்யப்பட்டார்கள்.