தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு மீண்டும் தள்ளிப்போகும் வாய்ப்பு இருக்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் வரும் பிப்ரவரி முதல் தேதி அனைத்து வகுப்பினராக 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த அறிவுப்புக்கு பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே நல்ல வரவேற்பும் கிடைத்தது.
இந்நிலையில் தே.மு .தி.க. தலைவர் விஜயகாந்த ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது,
தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பது குறித்து தமிழக அரசின் அறிவிப்பை தே. மு. தி .க கட்சியும் வரவேற்கிறது. ஆனால் கடந்த சில தினங்களாக தென் ஆப்பிரிக்க நாட்டில், நியோகோவ் என்னும் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகின்றன . இந்த வைரஸானது மனிதர்களுக்கு பரவும் வாய்ப்புள்ளதாகவும் மற்றும் அதிக இறப்பு விகிதத்தை கொண்டுள்ளது என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குழந்தைகளுக்கும், மாணவர்களுக்கும் பாதுகாப்பானதா என்பதை தமிழக அரசு கருத்தில் கொள்ள வேண்டும். கொரோனா வைரஸ் பரவல் இன்னும் குறையாத ஒரு நேரத்தில் கடந்த டிசம்பர் மாதம் முதல் அமலில் இருந்த இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுபாடுகளை தமிழக அரசு ரத்து செய்திருப்பது நடக்கவிருக்கும் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்காகவோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஊரடங்குகள் நீங்கி அனைத்திற்கும் அனுமதி அளிக்கப்பட்ட பிறகு பள்ளிகளை ஏன் திறக்ககூடாது என்ற கேள்வி வந்துவிடும் என்பதற்காகவே பிப்ரவரி 1-ந் தேதி முதல் அனைத்து பள்ளிகளும், கல்லூரிகளும் திறக்கப்படும் என்று அறிவித்தது தேர்தலை கருத்தில் கொண்டோ என எண்ணத் தோன்றுகிறது.
தேர்தல் முடிந்த பின் இந்த புதொய்ய வைரஸ் பரவி வருவதாக கூறி தமிழகத்தில் மறுபடியும் ஊரடங்கை கொண்டு வர மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம். அதனால் மாணவர்களின் நலன் கருதி அனைத்து வகுப்புகளுக்கும் நேரடி வகுப்புகள் நடத்தலாமா? வேண்டாமா என்பது குறித்து தமிழக அரசு ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும்.
பொது தேர்வை கருத்தில் கொண்டு 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகளை நடத்தலாம் என கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவரது அறிக்கையில் கூறியுள்ளார்.