Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகள்! அவசர ஆலோசனையில் திமுக!

தமிழகத்தில் சென்ற ஆறாம் தேதி சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது அதோடு தமிழகத்துடன் சேர்த்து புதுவை, கேரளா, மேற்கு வங்கம், அசாம், போன்ற நான்கு மாநிலங்களுக்கும் தமிழகத்துடன் சேர்த்து மொத்தமாக ஐந்து மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இந்த ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல்களில் தமிழகம், கேரளா, புதுவை, அசாம், ஆகிய நான்கு மாநிலத் தேர்தல்கள் முன்னரே முடிந்திருந்த நிலையில், சுமார் 294 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட மேற்குவங்க மாநிலத்தில் மட்டும் வைத்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வந்தது. அதன்படி நேற்றைய தினம் அந்த மாநிலத்தில் இறுதிக்கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற்று முடிந்தது.

இந்த நிலையில், வாக்கு பதிவு முடியும் வரையில் எந்த விதமான கருத்துக்கணிப்புகளையும் வெளியிடக் கூடாது என்று தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்தது. அதன்படி மேற்குவங்கத்தில் இறுதிக்கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்ததை முன்னிட்டு நேற்று இரவு ஏழு முப்பது மணி அளவில் அனைத்து விதமான கருத்துக் கணிப்புகளும் வெளியாகத் தொடங்கின.

அதன்படி தமிழ்நாட்டில் திமுக தான் ஆட்சி அமைக்கப் போகிறது என்று பல கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி இருக்கிறது. இந்த கருத்துகணிப்பு உண்மைதானா அல்லது பொய்யா என்பது வருகின்ற இரண்டாம் தேதி தமிழகம் முழுவதும் தெரிய வந்துவிடும்.

இதற்கிடையில், திமுக சார்பாக மாவட்ட செயலாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் கூட்டம் இன்று காணொளி மூலமாக நடைபெற இருப்பதாக அந்த கட்சியின் தலைமை அறிவித்திருக்கிறது. அதன்படி இன்று மாலை 5 மணி அளவில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறவிருக்கிறது. இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் வேட்பாளர்கள் என்று எல்லோரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்திருக்கிறார்.

இந்தக் கூட்டத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளன்று வாக்கு எண்ணும் மையத்தில் திமுக சார்பாக இருப்பவர்கள் எவ்வாறு விழிப்புடன் இருக்கவேண்டும்,எந்த தவறும் நடைபெறாமல் இருப்பதை அவர்கள் எப்படி உறுதி செய்ய வேண்டும் என்பது தொடர்பான பல்வேறு ஆலோசனைகளை திமுக தலைவர் ஸ்டாலின் வழங்க இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version