முன்பெல்லாம் பனிரெண்டாம் வகுப்பில் எடுக்கும் மதிப்பெண்களை வைத்தே மருத்துவக்கல்லூரியில் பலரும் சேர்ந்தார்கள். அப்படி மருத்துவராக மக்களுக்கு பணியாற்றியவர்கள் பலர். அதிலும் பலரும் சிறந்த மருத்துவர்களாக இருந்திருக்கிறார்கள். அதன்பின் மருத்துவ படிப்புக்கு நுழைவுத்தேர்வை கொண்டு வந்தார்கள். பனிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண்களை பெற்றவர்கள் அந்த நுழைவு தேர்வில் சுலபமாக தேர்ச்சி பெற்றார்கள்.
ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்தபின் நாடு முழுவதும் நீட்(NEET) எனும் நுழைவு தேர்வை கொண்டு வந்து இதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மருத்துவ கல்லூரியில் படிக்க இடம் கிடைக்கும் என்றார்கள். இதற்கு தமிழ்நாட்டில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. நீட் தேர்வு கிராமபுற பகுதிகளில் படிக்கும் மாணவர்களை பாதிக்கும் என பலரும் சொன்னாகள். அனிதா என்ற மாணவி நீட் தேர்வை எழுதிவிட்டு தற்கொலையும் செய்து கொண்டார். எனவே, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை வலுவாக வைக்கப்பட்டது.
தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்கிற கோரிக்கையும் வைக்கப்பட்டது. ஆனால், பாஜக அரசு செவி சாய்க்கவில்லை. நீதிமன்றம் மூலம் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என சொல்லிவிட்டது. எனவே, தமிழகத்தை சேர்ந்த மாணவ, மாணவிகளும் நீட் தேர்வை எழுதி வருகிறார்கள். நீட் தேர்வை சரியாக எழுதாத சில மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொண்டார்கள். ஆனாலும், நீட் தேர்வு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
இந்நிலையில், இந்த வருடம் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றுடன் அவகாசம் நிறைவு பெறுகிறது. 2025 – 2026ம் ஆண்டிற்கான நீட் தேர்வு மே 4ம் தேதி நாடு முழுவதும் நடைபெறவுள்ளது. neet.nta.nic.in என்ற இணையதளம் வழியாக நீட் தேர்வுக்கு எல்லோரும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேர்வு மையங்கள் குறித்த விவரங்கள் வருகிற ஏப்ரல் மாதம் 26ம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.