நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தொடங்கிய சிவகார்த்திகேயன் அதன் பிறகு தமிழ் சினிமாவில் 3, மெரினா மற்றும் கேடிபில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். அவரைத் தொடர்ந்து அவர் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், எதிர்நீச்சல், மான் கராத்தே, ரஜினிமுருகன், வேலைக்காரன் என தொடர்ச்சியான வெற்றி படங்களை கொடுத்ததன் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மாறிவிட்டார்.
தற்போது இவர் டான் மற்றும் அயலான் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குனர் நெல்சன் டிலிப்குமர் இயக்கத்தில் டாக்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் வினய், யோகிபாபு, அர்ச்சனா மற்றும் தீபா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்த திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதமே வெளியாக இருந்த நிலையில் கொரோனா காரணமாக ரிலீஸாகவில்லை. இதற்கிடையில் இந்த திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் என அடிக்கடி செய்திகள் பரவி வந்த நிலையில், தற்போது டாக்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த படத்தை காண சிவகார்த்திகேயன் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.