தமிழில் பிரம்மாண்ட வெற்றி பெற்று பிற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு சொதப்பிய டாப் 5 படங்கள்!!

0
106
Rajinikanth Vijay Tamil Remake Movies List

தமிழில் பிரம்மாண்ட வெற்றி பெற்று பிற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு சொதப்பிய டாப் 5 படங்கள்!!

என்ன தான் ஹை பட்ஜெட்டில்,பெரிய நடிகர்களை வைத்து படம் இயக்கினாலும் கதைக்கு பொருத்தமான கதாபாத்திரம் அமையவில்லை என்றால் அப்படம் தோல்வியை தான் சந்திக்கும். உதாரணத்திற்கு ‘பாட்ஷா’ படத்தில் ரஜினியின் பாட்ஷா(மாணிக்கம்) கதாபாத்திரத்தில் வேறு யாராவது நடித்திருந்தால் எப்படி இருக்கும் என நினைத்து கூட பார்க்க முடியவில்லை.

இது போல் தமிழில் சூப்பர் டூப்பர் ஹிட்டாகிய படங்கள் பிற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு அந்த மொழிகளில் பெரிய ஹீரோக்கள் என்று சொல்லப்படும் நடிகர்கள் நடித்தும் அட்டு பிளாப் ஆன 5 படங்களின் விவரங்களை தான் பார்க்க போகிறோம்.

1.லக்ஷ்மி நரசிம்ஹா (சாமி)

கடந்த 2003 ஆம் ஆண்டு இயக்குநர் ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான காதல்,அதிரடித் திரைப்படம் தான் சாமி.இத்திரைப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருந்தார்.நகைச்சுவை வேடத்தில் விவேக் மற்றும் வில்லனாக கோட்டா ஸ்ரீனிவாச ராவ் மிரட்டி இருப்பார்.நடிகர் விக்ரம் அவர்களின் திரைப் பயணத்தில் முக்கிய திருப்பு முனையாக அமைந்த இப்படம் கதை மற்றும் வசூல் ரீதியாக பாக்ஸ் ஆபிஸில் பட்டய கிளப்பியது.இப்படத்திற்கு இசையமைத்த ஹாரிஸ் ஜெயராஜ் ஒவ்வொரு பாடலையும் செதுக்கி வழங்கி இருப்பார்.

இப்படி தமிழில் பிளாக் பஸ்டர் வெற்றி கண்ட இப்படத்தை தெலுங்கில் ‘லக்ஷ்மி நரசிம்ஹா’ என்ற பெயரில் ரீமேக் செய்து ஜெயந்த் என்ற இயக்குநர் இயக்கினார்.இப்படத்தில் ஹீரோவாக பாலையா,NBK என்று அழைக்கப்படும் நந்தமுரி பாலகிருஷ்ணா அவர்களும் இவருக்கு ஜோடியாக அசினும் நடித்திருப்பார்.

கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான இப்படம் தமிழில் வெளியான சாமி படத்தை போல் வெற்றி படமாக அமையவில்லை.சாமி படத்தில் விக்ரமின் நடிப்பு அவரது வசனம் அனைத்தும் ரசிக்கும் படியாக இருக்கும்.ஆனால் சாமியின் தெலுங்கு ரீமேக் படமான லக்ஷ்மி நரசிம்ஹா படத்தில் பாலையா நடிப்பு மற்றும் அவரது வசனம் சகிக்க முடியாதளவு இருக்கும்.விக்ரமின் சாமி படத்தின் ரசிகர்கள் லக்ஷ்மி நரசிம்ஹா படத்தை பார்ப்பதை தவிர்த்தல் நல்லது என்று சொல்லும் அளவிற்கு அந்த படம் அமைந்திருக்கும்.

2.அதிக்ஷா (வருத்தப்படாத வாலிபர் சங்கம்)

கடந்த 2013 ஆம் ஆண்டு இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் வெளியான படம் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’.இது காதல்,நகைசுவை கலந்த தமிழ்த் திரைப்படமாகும்.இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாகவும், அவருக்கு ஜோடியாக நடிகை  ஸ்ரீதிவ்யாவும் நடித்திருந்தார்.

நகைச்சுவை வேடத்தில் சூரி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரத்தில் சத்யராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.இப்படத்தின் கதை மற்றும் பாடல்கள் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று பிளாக் பஸ்டர் படமாக கொண்டாடப்பட்டது.படம் வெளியான காலகட்டத்தில் படத்தில் இடம் பெற்றிருந்த அனைத்து பாடல்களும் செம்ம ஹிட்.மேலும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும்  ஸ்ரீதிவ்யா கெமிஸ்ட்ரி சூப்பராக வேலை செய்திருக்கும்.அதுமட்டுமல்லாமல் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி காமெடி கூட்டணியும் பட்டையை கிளப்பியிருக்கும்.

இப்படி தமிழில் பிளாக் பஸ்டர் வெற்றி கண்ட இப்படத்தை கன்னடத்தில் அதிக்ஷா என்ற பெயரில்
ரீமேக் செய்து நந்த கிஷோ என்ற இயக்குநர் இயக்கினார்.இப்படத்தில் சரண் ஹீரோவாகவும் அவருக்கு ஜோடியாக ஹெபா பட்டேலும் நடித்திருப்பார்.கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான இப்படம் பெரும் தோல்வி படமாக அமைந்தது.

தமிழில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்க படத்தின் கதை, இப்படத்தில் நடித்துள்ள கதாபாத்திரங்களின் நடிப்பு,முக பாவனை.பாடல் என்று அனைத்தும் மனதை கொள்ளை கொள்ளும் படியாக இருக்கும்.ஆனால் அதிக்ஷா படத்தில் போஸ் பாண்டி ரோலில் சரணின் நடிப்பு வெறுப்பை ஏற்படுத்தும் விதமாக இருக்கும்.எந்த விதத்திலும் போஸ் பாண்டி ரோல் அவருக்கு செட் ஆகாது என்று சொல்லும் படியே அமைந்திருக்கும்.

3.சாஹுகாரா (முத்து)

கடந்த 1995 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் மசாலாத் திரைப்படமாக வெளியான படம் முத்து.இப்படத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாகவும் அவருக்கு ஜோடியாக நடிகை மீனாவும் நடித்திருப்பார்.மேலும் இப்படத்தில் இவர்கள் மட்டுமல்லாமல் சரத் பாபு,ராதா ரவி,செந்தில்,வடிவேலு ஆகியோர் துணை வேடங்களில் நடித்திருப்பார்கள்.

ரஜினி நடிப்பில் தமிழில் வெளியான இந்த முத்து திரைப்படம் கடந்த 1994 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘தென்மாவின் கொம்பத்’ படத்தின் ரீமேக் ஆகும்.என்ன தான் ரீமேக் படமாக இருந்தாலும் தென்மாவின் கொம்பத் படத்தை காட்டிலும் தமிழில் வெளியான முத்து பிளாக் பஸ்டர் படமாக கொண்டாடப்பட்டது.இப்படத்தில் ரஜினியின் ஸ்டைல் அவரது பேச்சு,படத்தின் பாடல்கள் என அனைத்தும் இன்றளவும் ரசிக்கும் படியாக அமைந்திருக்கும்.

இப்படி தமிழில் பிளாக் பஸ்டர் வெற்றி கண்ட இப்படத்தை கன்னடத்தில் சாஹுகாரா என்ற பெயரில் ரீமேக் செய்து ஓம் பிரகாஷ் ராவ் என்ற இயக்குநர் இயக்கினார்.அதில் வி.ரவிச்சந்திரன் ஹீரோவாகவும், அவருக்கு ஜோடியாக ரம்பாவும் நடித்தனர்.மேலும் இவர்களுடன் சஷிகுமார்,அனு பிரபாகர் உள்ளிட்டோர் துணை வேடங்களில் நடித்திருப்பார்கள்.கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான இப்படம் பெரும் தோல்வி படமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

4.கைதி நம்பர் 150 (கத்தி)

கடந்த 2014 ஆம் ஆண்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான படம் கத்தி.இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்து அசத்தியிருப்பார்.விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடித்து ரசிகர்களை கவர்ந்திருப்பார்.விவசாயிகள் படும் இன்னல்களை தத்துரூபமாக காட்டியிருப்பதால் படம் பார்க்கும் ஆடியன்ஸ்க்கு அழகாக அதை கொண்டு சேர்த்திருப்பர் முருகதாஸ்.

இப்படி தமிழில் பிளாக் பஸ்டர் வெற்றி கண்ட இப்படத்தை தெலுங்கில் ’கைதி நம்பர் 150’ என்ற பெயரில் ரீமேக் செய்து வி.வி.விநாயக் என்ற இயக்குநர் இயக்கினார்.இப்படத்தில் டோலிவுட்டின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி ஹீரோவாகவும் அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வாலும் நடித்தார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான இப்படத்திற்கு கத்தி படத்திற்கு கிடைத்த வரவேற்பை போல் கிடைக்கவில்லை.கத்தி படத்தில் விஜய் அவர்களின் நடிப்பு அவரது நடனம் அனைத்தும் பார்ப்பதற்கு அருமையாக இருக்கும்.ஆனால் தெலுங்கில் வெளியான ’கைதி நம்பர் 150’ திரைப்படத்தில் சிரஞ்சீவி அவர்களின் நடிப்பு விஜய்க்கு இணையாக அமையவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

5.99 (96)

கடந்த 2018 ஆம் ஆண்டு சி.பிரேம் குமார் இயக்கத்தில் வெளியான படம் 96.இப்படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாகவும், அவருக்கு ஜோடியாக த்ரிஷாவும் நடித்தார்.இப்படத்தில் கதை அனைவரின் கண்களையும் கலங்க செய்துவிடும்.அந்தளவிற்கு இப்படத்தில் அனைவரும் அழகாக எதார்த்தமாக நடித்திருப்பார்கள்.அழகிய காதல் காவியமான இப்படம் தமிழில் வெளியாகி பிளாக் பஸ்டர் படமாக கொண்டாடப்பட்டது.

இதனை தொடர்ந்து இப்படம் கன்னடத்தில் ’99’ என்ற என்ற பெயரில் உருவானது.இப்படத்தை பிரீதம் குப்பி இயக்கி கணேஷ்,பாவனா உள்ளிட்ட பலர் நடித்தனர்.கடந்த 2019 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகிய இப்படமும் பெரும் தோல்வியை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.