மீண்டும் களைகட்டிய ஏற்காடு! பொதுமக்கள் மகிழ்ச்சி!
தமிழ்நாடு அரசு கொரோனாக் கட்டுப்பாடுகள் காரணமாக நான்கு மாதங்களுக்கு சுற்றுலாத் தளங்களுக்கு அனுமதி தரவில்லை.கடந்த திங்கள்கிழமை முதல் பல தளர்வுகளை அறிவித்து தமிழக மக்களின் காத்திருப்பை பூர்த்தி செய்தது தமிழக அரசு.இந்தத் தளர்வுகளில் திரையரங்கங்கள்,நீச்சல் குளங்கள்,பூங்காக்கள்,கேளிக்கை விடுதிகளில் மதுபானக் கூடங்கள் மற்றும் சுற்றுலாத் தளங்கள் ஆகியவைத் திறப்பதற்கு அனுமதி அளித்தது.
இந்நிலையில் தமிழகத்தில் மலைப்பிரதேசங்களான ஊட்டி,கொடைக்கானல்,ஏற்காடு போன்ற சுற்றுலாத் தளங்கள் புத்துயிர் பெற்றது.மேலும் படகு இல்லங்கள்,பூங்காக்கள் ஆகியவைவும் செயல்பாட்டுக்கு வந்தன.அரசு அறிவித்திருக்கும் விதிமுறைகளை பின்பற்றி சுற்றுலா வாசிகள் இந்த வசதிகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.மேலும் சமூக இடைவெளியையும் கடைப்பிடிக்க வேண்டும்.
சேலம் குரும்பம்பட்டி உயிரியல் பூங்கா நேற்று திறக்கப்பட்டது.இந்த பூங்காவில் அனைவரும் முகக்கவசம் அணியவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.மேலும் ஏற்காட்டில் இன்று ஆறு பூங்காக்கள் திறக்கப்பட்டன.தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான அண்ணா பூங்கா,ஏரி பூங்கா,ரோஜா தோட்டம் பூங்கா,ஐந்திணை பூங்கா மற்றும் 2 பூங்காக்கள் திறக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதேபோல் ஆத்தூர் அடுத்த ஆனைவாரி முட்டல் அருவி,ஏற்காடு மான் பூங்கா,கரடியூர் சுற்றுலா மையங்களிலும் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.ஏற்காட்டில் பூங்காக்கள் திறக்கப்பட்டாலும் கட்டுப்பாடுகள் தொடர்கின்றன.இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களும் கொரோனா நெகடிவ் சான்றிதழ் வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
சுற்றுலா பயணிகள் அரசு விதித்த கட்டுப்பாடுகளை பின்பற்றி நடக்குமாறு காவல்துறை அதிகாரிகள் மக்களுக்கு அறிவுறுத்துகின்றனர்.மேலும் ஏற்காடு செல்லும் சாலைகளில் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டும் வருகின்றனர்.இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஏற்காட்டுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.