திருப்பத்தூர் அருகே 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த தந்தை!. விஷம் குடித்து தானும் தற்கொலை முயற்சி!. குடும்ப தகராறில் 14 மாத கைக்குழந்தை உயிரிழந்த சோகம் போலீசார் விசாரணை.
திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அடுத்த கிழக்குபதனவாடி கிராமத்தை சேர்ந்த சிவக்குமார் (30) என்பவருக்கும் ஜல்லியூர் பகுதியை சேர்ந்த சத்யா என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.
தம்பதியினருக்கு 3 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் இருவருக்கும் திருமணம் ஆன மூன்று மாதத்தில் இருந்து அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
சிவகுமாரின் தந்தை மற்றும் தாய் இறந்த நிலையில் திருமணம் ஆன நாள் முதல் நேற்று வரை கிட்டத்தட்ட 100 பஞ்சாயத்து நடத்தி உள்ளனர்.
பீடி சுற்றும் தொழில் செய்து வந்த சத்யா தினம் தினம் சிவகுமாருடன் போராடி வாழ்ந்து வந்துள்ளார்.
இருவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு இருந்துவரும் நிலையில் நேற்று வழக்கம் போல தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் சத்யா கோபித்து கொண்டு இரண்டாவது மற்றும் பால்குடிக்கும் மூன்றாவது மகளை வீட்டிலேயே விட்டு சென்று மூத்த மகளை மட்டும் உடன் அழைத்து கொண்டு தனது தாய் வீடான ஜல்லியூர் கிராமத்திற்கு சென்றுள்ளது.
டிராக்டர் வைத்து கொண்டு விவசாய பணிகளை செய்துவரும் சிவகுமார் வீட்டில் இருந்த இரண்டு குழந்தைகளுடன் இருந்து வந்துள்ளார்.
14 மாத குழந்தை பாலுக்கு அழுந்துள்ளது குழந்தையை சமாதானம் செய்ய முடியாத சிவகுமார் கொஞ்சம் கூட இறக்கம் இல்லாமல் பாலில் விஷத்தை கலந்து கடைசி குழந்தைக்கு முதலில் கொடுத்து உள்ளார்.
பின்னர் இரண்டாவது குழந்தை இலக்கியாவிற்கு சாப்பாட்டில் விஷம் கலந்து கொடுத்துள்ளார்.
அந்த குழந்தை சாப்பிட முடியாமல் வாந்தி எடுத்துள்ளது.
இதனை கண்டு பயந்து போன சிவகுமார் அருகில் இருக்கும் அவரது அண்ணனுக்கு போன் செய்து குடும்ப தகராறு காரணமாக 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டேன் நானும் குடித்து விட்டேன் என்று தகவல் கூறியுள்ளார்.
இதனை அறிந்த அவரது அண்ணன் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு போன் செய்து சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.
அப்போது பரிசோதித்த மருத்துவர்கள் பால் குடிக்கும் கடைசி குழந்தை இறந்து விட்டதாக கூறியுள்ளார்.
கடைசி மகள் மித்ரா (எ) வேண்டாமணி என்ற 14 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ள நிலையில் சிவகுமார் மற்றும் அவரது இரண்டாவது குழந்தை தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிவக்குமார் இந்த முடிவை ஏன் எடுத்தார் இதற்கு காரணம் என்ன என்று கந்திலி போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இதனால் அநியாயமாக பால் குடிக்கும் குழந்தை இறந்து போன இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.