நாளை முதல் பயணிகள் ரயில்களை இயக்க முடிவு – மத்திய அரசு அறிவிப்பு
கடந்த மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கு தொடங்கியதிலிருந்து ரயில்கள், பேருந்துகள் உள்ளிட்ட பொது போக்குவரத்து எதுவும் இயக்கப்படவில்லை.
தற்போது இரண்டாவது முறையாக மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து சில தளர்வுகளை மத்திய அரசு அறிவித்து வருகிறது.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவரவர்கள் சொந்த மாநிலத்திற்குக் கொண்டு சேர்க்க மட்டும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், நாளை (12.05.2020) முதல் பயணிகள் ரயில் சேவையை மீண்டும் துவங்க முடிவெடுத்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
முதற்கட்டமாக, டெல்லியிலிருந்து மும்பை, பாட்னா, அகர்தலா, அகமதாபாத், திருவனந்தபுரம், பெங்களூரு, சென்னை உள்ளிட்ட முக்கிய 15 நகரங்களுக்கு, 30 சேவைகளைக் கொண்ட 15 பயணிகள் ரயில்கள் இயக்கப்படும் என்றும் ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதற்கான முன்பதிவு இன்று (மே 11) மாலை 4 மணி முதல் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. IRCTC இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் மட்டுமே முன்பதிவு டிக்கெட்களை பெற முடியும்.
ரயில் நிலையங்களில் டிக்கெட் கவுன்ட்டர்கள் திறந்திருக்காது. கவுன்ட்டர்களில் நடைமேடை டிக்கெட் உள்பட எந்த டிக்கெட்டும் வழங்கப்படாது.
முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட் வைத்திருப்பவர்கள் மட்டுமே ரயில் நிலையங்களுக்குள் அனுமதிக்கப்படுவர். அவர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்ட பிறகே அவர்கள் ரயில்களில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர்.
ரயில் பயணத்தின்போது, பயணிகள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் விரைவில் வெளியிடும் என்று ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்த வழிகாட்டுதல்களைப் பயணிகள் கடைப்பிடிப்பதைப் பொருத்து, நாட்டின் பிற பகுதிகளிலும் ரயில் சேவையை அடுத்தடுத்து தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.