கொரோனா நோய்த்தொற்றை அடையாளம் காண நாய்களுக்குப் பயிற்சி

0
195

சிலியின் காவல்துறையில் உள்ள மோப்ப நாய்களுக்கு, மனிதர்களிடையே கொரோனா நோய்த்தொற்றை அடையாளம் காணப் பயிற்சியளிக்கப்படுகிறது. பேரங்காடிகள், விமான நிலையங்கள், உடற்பயிற்சி நிலையங்கள் ஆகிய பொது இடங்களை மீண்டும் சுமூகமாகத் திறப்பதில் அந்த மோப்ப நாய்கள் பெரும்பங்காற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா நோயாளிகளை வாசனையின் மூலம் அடையாளம் காணத் தற்போது, 4 நாய்க்குட்டிகளுக்குப் பயிற்சியளிக்கப்படுகிறது. ஆனால், அவ்வாறு முகர்வதன் மூலம் நாய்களால் கொரோனா கிருமித்தொற்றை அடையாளம் காண முடியும் என்பதற்கு ஆதாரம் ஏதும் இல்லை.

இருப்பினும், முன்னர், புற்றுநோய், மலேரியா ஆகிய நோய்களை நாய்களால் அடையாளம் காண முடியும் என்று சில ஆய்வுகள் காட்டின. கொரோனா கிருமித்தொற்றுக்குத் தனிப்பட்ட வாசனை ஏதும் இல்லை என்று நிபுணர் தெரிவித்தார். ஆனால், பாதிக்கப்பட்டோரின் வேர்வையிலிருந்து நாய்களால் ஏதேனும் தனிப்பட்ட வாசனையைக் கண்டுபிடிக்க முடியும் என்று எதிர்பார்ப்பதாக அவர் கூறினார். ஜூன் மாதம் சிலியில் கிருமிப்பரவல் உச்சகட்டத்தை அடைந்தது. தற்போது அங்கு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்படுவதாக CNN செய்தி நிறுவனம் குறிப்பிட்டது. சிலியின் பொருளியல் நடவடிக்கைகளை மீண்டும் திறக்கும் 5 ஆம் கட்டத் திட்டம் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.