ஆஸ்கர் வென்ற படத்தைக் கேலி செய்த ட்ரம்ப்: பதிலடி கொடுத்த விநியோகஸ்தர் !
கடந்த வாரம் நடந்து முடிந்த 92 ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் 4 ஆஸ்கர் விருதுகளை வென்ற பாராசைட் படத்தை அமெரிக்க அதிபர் கேலி செய்துள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்கர் விழாவில் `பாராசைட்’ என்ற தென் கொரிய திரைப்படம் சிறந்த படம், இயக்குநர், திரைக்கதை, வெளிநாட்டுத் திரைப்படம் என நான்கு பிரிவுகளில் விருதைப் பெற்று வரலாற்று சாதனை படைத்தது. முதன் முதலாக அமெரிக்காவில் தயாராகாத ஒரு திரைப்படம் நேரடியாக இத்தனை விருதுகளைப் பெறுவது இதுவே முதல் முறை. இதையடுத்து உலகம் முழுவதும் இந்த படத்தின் மீதான கவனம் குவிந்தது.
இந்நிலையில்
இந்த படத்தைப் பற்றி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இப்போது கேலியாக விமர்சனம் செய்துள்ளார்.
தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர்,
தென் கொரியாவுடன் நமக்கு வர்த்தக பிரச்சனைகள் உள்ள நிலையில் பாராசைட் படத்துக்கு 4 ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் அந்த படம் நன்றாக இருக்கிறதா? அதைப் பற்றி எனக்குத் தெரியவில்லை. கொரியாவிலிருந்து ஒரு சிறந்த திரைப்படம்! சிறந்த வெளிநாட்டுப் படத்துக்கான விருதை அது பெற்றுள்ளது. இதற்கு முன்பு இவ்வாறு நடந்தது இல்லை என நினைக்கிறேன்’
எனக் கூறி சர்ச்சைகளைக் கிளப்பினார்.
ட்ரம்ப்பின் இந்த கருத்துக்கு அமெரிக்காவில் பாராசைட் படத்தை விநியோகம் செய்தவரான நியோன் ‘ட்ரம்ப்பால் சப் டைட்டிலைப் பார்க்க முடியாது என்பதை புரிந்து கொள்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.