நம் அன்றாட வாழ்வில் பாலின் தேவை இன்றையமையாத ஒன்றாகும்.தயிர்,நெய்,வெண்ணெய் உள்ளிட்டவைகள் பாலில் இருந்து தயாரிக்கப்படுகின்ற உணவுப் பொருட்களாகும்.அது மட்டுமின்றி டீ,காபி,பூஸ்ட்,ஹார்லிக்ஸ்,மில்க் ஷேக்,ஸ்மூத்தி போன்ற பானங்கள் தயாரிக்க பால் முக்கிய மூலப் பொருளாக திகழ்கிறது.
கால்சியம்,புரதம்,வைட்டமின் டி உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் அதிகளவு நிறைந்திருக்கிறது.வளரும் குழந்தைகளுக்கு பால் சிறந்த ஊட்டச்சத்து பானமாக திகழ்கிறது.ஆனால் இன்று விற்கப்படும் பாலில் அதிக கலப்படம் நடக்கிறது என்று ஆய்வு முடிவில் தெரிய வந்திருக்கிறது.
பாலின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தண்ணீர் கலப்பது,அதன் அடர்த்தியை அதிகரிக்க வேதிப்பொருட்கள் பயன்படுத்துவது போன்ற செயல்களில் விற்பனையாளர்கள் ஈடுபடுகின்றனர்.
பண்ணைகளில் வாங்கப்படும் பால்,பாக்கெட் பால் என்று அனைத்திலும் கலப்படம் புகுந்துவிட்டது.பாலில் தண்ணீர் கலப்பதை தவிர வேறு என்ன கலப்படம் நடக்கிறது என்பதை மக்கள் அறிந்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
பாலின் அளவு அதிகரிக்க மாவுச்சத்து கலக்கப்படுகிறது.இதனால் பாலின் அளவு உயரும்.ஆனால் அதன் தரம் குறைந்துவிடும்.பாலில் மாவுச்சத்து கலக்கப்பட்டிருப்பதை கண்டறிவது எப்படி?
ஒரு பாத்திரத்தில் மூன்று மில்லி பால் மற்றும் ஐந்து மில்லி தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு இதை குளிர்வித்து இரண்டு சொட்டு அயோடின் டிஞ்சர் சேர்க்கவும்.பாலின் நிறம் நீலமாக மாறினால் அதில் மாவுச்சத்து அதாவது ஸ்டார்ச் கலக்கப்பட்டிருக்கிறது என்று அர்த்தம்.
வாங்கிய பாலில் சில சொட்டுக்களை சாய்வான தரையில் விடவும்.இப்படி செய்யும் போது பால் வழிந்தோடும்.இதில் பால் தெரிந்தால் அது கலப்படமற்றது.அதுவே தண்ணீர் தடம் தெரிந்தால் அது கலப்படமானது.
10 மில்லி அளவு பாலை ஒரு கொள்கலன்களில் ஊற்றி நன்கு குலுக்கவும்.இவ்வாறு செய்யும் போது நுரை வந்தால் அது சோப்பு கலக்கப்பட்ட பால் என்று அர்த்தம்.