பொதுமக்களுக்கு தரிசனம் – இன்று முக்கிய முடிவை வெளியிடும் திருமலை திருப்பதி தேவஸ்தானம்

0
102

கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் 20ஆம் தேதி முதல் ஏழுமலையான் தரிசனம்,மத்திய மற்றும் மாநில அரசுகளின் உத்தரவின்படி ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து நான்காம் கட்ட பொது முடக்கம் அமல்படுத்தப்படுவதற்கு முன்பு,ஆந்திர மாநில அரசு கோவில்கள் திறப்பதற்கான அரசாணை ஒன்றை வெளியிட்டது.

இதன்படி ஆந்திர மாநிலத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும், சமூக இடைவெளியை பின்பற்றுவதற்கு வசதியாக, தரிசன வரிசைகள் மாற்றி அமைக்கப்பட்டது. இருந்தபோதிலும் நான்காம் கட்ட பொது முடக்கத்தில், கோவில்களை திறக்க, மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை.

ஐந்தாம் கட்ட பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில், வரும், 8ம் தேதி முதல், வழிபாட்டுத் தலங்களை திறக்க மத்திய அரசு அனுமதியளித்து உள்ள நிலையில் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள், ஆந்திர அரசிடம், ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு தரிசன அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர். இந்தக் கோரிக்கைக்கு இணங்கி திருமலை ஏழுமலையான் தரிசனத்திற்கு, பக்தர்களை அனுமதி அளிக்கும் அரசாணையை, ஆந்திர அரசு கடந்த 2ம் தேதி வெளியிட்டது.

இந்நிலையில் வரும் 8ம் தேதி முதல் கோவில்களில் பொதுமக்களை அனுமதிக்கலாம என மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில் வரும் 8ம் தேதி முதல் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு டிக்கெட் வழங்குவது ஆன்லைன் முன்பதிவு செய்வது, வாடகை அறைகள் வழங்குவது அவர்களின் போக்குவரத்திற்கு ஏற்பாடு செய்வது, அன்னதானம் வழங்குவது குறித்து தேவஸ்தான அதிகாரிகள் தேவஸ்தான ஆகம ஆலோசனை குழுவுடன் இணைந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று இது தொடர்பான அறிவிப்பி வெளியாகும் என தேவஸ்தான சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.