தவெகவுடன் கூட்டணியில் இணையும் பிரபல கட்சி! பாஜக கொடுத்த ரியாக்ஷன் 

0
294

கடந்த அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி திட்டமிட்டபடி நடிகர் விஜய் ஆரமித்த தமிழக வெற்றிக் கழகம் சார்பில் முதல் மாநாடு நடந்து முடிந்துள்ளது. மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய விஜய் மத்திய மாநில ஆளுங்கட்சிகளாக இருக்கும் பாஜக மற்றும் திமுக என இரு கட்சிகளையும் சரமாரியாக விமர்சனம் செய்திருந்தார்.

நடிகர் விஜய் யாரை ஆதரித்து மற்றும் எதிர்த்து அரசியல் செய்ய போகிறார் என தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தவர்களுக்கு இதன் மூலமாக தெளிவானது. இந்நிலையில் தங்களை நம்பி வருபவர்களை ஆதரிப்போம், அதிகாரத்தில் பங்களிப்போம் என பேசியது திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக விசிக போன்ற கட்சியை சேர்ந்த தலைவர்கள் ஏற்கனவே அதிகாரத்தில் பங்கு கேட்டு வலியுறுத்தி வரும் நிலையில் விஜய் பேச்சு அதை மேலும் பேசு பொருளாக்கியது.

கட்சி பெயரை அறிவித்த நாளிலிருந்து தவெக நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி வைக்கலாம் என யூகங்கள் பேசப்பட்டு வந்த நிலையில் விஜய்க்கு ஆதரவாக தம்பி என ஆரம்பித்து பேசிய சீமான் தற்போது கடுமையாக விமர்சித்து பேசியதால் இரு கட்சிகளுக்கு இடையே கூட்டணி உருவாக வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் தான் பாண்டிச்சேரியில் ஆளும் என். ஆர். காங்கிரஸ் கட்சியுடன் தவெக கூட்டணி வைக்கலாம் என யூகங்கள் பேசப்பட்டு வருகிறது. முதல்வர் ரங்கசாமியும் இதற்கு சம்மதம் தெரிவித்து அதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

N. Rangaswamy
N. Rangaswamy

தவெக கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் புதுச்சேரி சேர்ந்தவர் என்பதும், அவர் முதல்வர் ரங்கசாமிக்கு நெருக்கமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் விஜய் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்னதாக பனையூரில் நடத்தப்பட்ட பிரமாண்ட கூட்டத்திற்கும், புதிய கட்சி தொடங்குவதற்கும் ரங்கசாமி தான் அரசியல் ஆலோசனை வழங்கியுள்ளார் என்றும் கூறுகின்றனர்.

TVK NR Congress Alliance in Pondicherry

மேலும் மாநாட்டில் வைக்கப்பட்ட தமிழக தலைவர்களின் பேனர்கள் விவகாரத்தில் கூட இவரின் ஆலோசனை இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வரவுள்ள 2026 சட்டமன்ற தேர்தலில் புதுச்சேரியில் நடிகர் விஜய்யின் தவெக கட்சியுடன் என்.ஆர் காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

தற்போது பாஜக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகித்துவரும் என்.ஆர் காங்கிரஸ் 2021 ஆம் ஆண்டிலிருந்தே பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறது. அதனால் இந்த தேர்தலில் அணி மாற வாய்ப்பிருப்பதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து பாஜக தரப்பில் அமைச்சர் நமச்சிவாயம் அவர்களிடம் பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு, முதல்வர் ரங்கசாமி அல்லது தவெக தலைவர் கூட்டணி குறித்து எதாவது பேசியுள்ளார்களா? அப்படி இல்லாத நிலையில் தன்னால் இது குறித்து கருத்து கூற முடியாது என தெரிவித்துள்ளார். அவர்கள் சார்பில் கூட்டணி குறித்து அறிவித்த பின்னரே பாஜக தனது நிலைப்பாட்டை அறிவிக்கும் என்றும், அதுவரை பேசப்படும் எந்த கருத்துக்கும் தன்னால் பதில் அளிக்க முடியாது என்று கூறியுள்ளார்.