திருச்சி தனியார் காப்பகத்தில் மூச்சுத் திறனல் காரணமாக இரண்டு பச்சிளம் குழந்தைகள் இறப்பு – ஶ்ரீரங்கம் போலீசார் விசாரணை!!
திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலை பகுதியில் குழந்தைகளுக்கான ஆதரவற்றோர் காப்பகம் (சாக்கீடு) செயல்பட்டு வருகிறது. அந்தக் காப்பகத்தில் அரசு மருத்துவமனைகளில் விட்டு செல்லப்படும் தொட்டில் குழந்தைகள், சாலையோரம் வீசப்படும் பிறந்த பிஞ்சு குழந்தைகள் இங்கு கொண்டு வந்து பராமரிக்கப்பட்டு வருகிறது. சுமார் 15-க்கும் மேற்பட்ட குழந்தைகள் அந்த காப்பகத்தில் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த மாதம் மூச்சுத் திணறல் காரணமாக 8- குழந்தைகள் திருச்சி அரசு மருத்துவமனை குழந்தைகள் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை பிறந்த 57 நாட்களே ஆன ஒரு பெண் குழந்தையும், மூன்று மாதமான ஒரு பெண் குழந்தையும் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தது.
தற்போது மருத்துவமனையில் 6- குழந்தைகள் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.கடந்த 30ஆம் தேதி காப்பகத்தில் உள்ள மூன்று மாதம் முதல் ஒன்பது மாத வரையிலான 20 பச்சிளம் குழந்தைகளுக்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மூலமாக தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதையடுத்து அடுத்த சில மணி நேரங்களில் 2 ஆண் குழந்தை மற்றும் 6 பெண் குழந்தைகளுக்கு திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், மூன்று மாத ஆண் குழந்தை ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.மேலும் சிகிச்சையில் இருந்த 8 குழந்தைகளில் 2 குழந்தைகள் சில நாட்களுக்கு முன்பு குணமடைந்த நிலையில் அவர்கள் மீண்டும் காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர்.
மீதமுள்ள 6 குழந்தைகள் சிகிச்சையில் இருந்த நிலையில் இன்று இரண்டு குழந்தைகள் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தது..இதுவரை மூன்று குழந்தைகள் உயிரிழந்த உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தனியார் காப்பகத்தில் பராமரிக்கப்படும் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்திய போது ஊட்டச்சத்து குறைபாடு, ஒவ்வாமை போன்ற காரணங்களால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் இந்த உயிரிழப்பு தொடர்பாக ஸ்ரீரங்கம் போலீசார் காப்பகத்தில் பணியாற்றும் ஊழியர்களிடமும் சிகிச்சை அளித்த மருத்துவர்கள் இடமும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.