திமுக வெற்றிக்கு காரணம் மோடி தான்! உண்மையை போட்டுடைத்த உதயநிதி ஸ்டாலின்
சமீபத்தில் நடந்த முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதற்கு காரணம் இரண்டு பேர்; ஒன்னு மோடி; இன்னொன்னு எங்க டாடி என்று அக்கட்சியின் இளைஞர் அணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளர்.
திருவள்ளுர் தெற்கு மாவட்ட திமுக சார்பில், சென்னை ஆவடியில் மொழிப்போர் தியாகிகளுக்கான பிரம்மாண்ட வீரவணக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த பொதுக்கூட்டத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு கட்சியினர் மத்தியில் சிறப்புரையாற்றினார்.
அப்போது அந்த விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, நடந்து முடிந்து பாராளுமன்ற தேர்தலில் நான் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்ததால் தான் 100 சதவீத வெற்றியை இந்தியாவையே திரும்பி பார்க்க கூடிய அளவுக்கு தமிழக மக்கள் தந்தார்கள் என்று கூறுகிறார்கள்.
ஆனால் கண்டிப்பாக அது என்னுடைய பிரச்சாரத்திற்கு தந்த வெற்றி இல்லை. அந்த வெற்றிக்கு காரணம் இரண்டு பேர். ஒன்று மோடி இன்னொன்னு எங்க டாடி. இந்த வெற்றி நம்முடைய தலைவருக்கு கிடைத்த வெற்றியாக தான் நான் பார்க்கிறேன் என்றும் அவர் கூறினார்.
எனக்கு சினிமாவும் அரசியலும் இரண்டு கண்கள் என்று மாவட்ட செயலாளர் நாசர் கூறினார். ஆனால் அது தவறு. நடிப்பை நான் மனதளவில் தான் செய்கிறேன். ஆனால், திராவிட முன்னேற்றக் கழகமும், கருப்பு சிவப்பும், தமிழ்மொழியும் என்னுடைய ரத்தத்தில் ஊறிப் போனது என்றார். அதேபோல் திமுக ஆட்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் தமிழ் ஆட்சி மொழிக்கு என்ன பங்கு உண்டு என்ற கேள்வி மக்கள் மத்தியில் அனைவருக்கும் உள்ளது.
தமிழ் வளர்ச்சிக்காக அமைச்சகத்தை உருவாக்கி தீவிரமாக செயல்படுத்தியது கருணாநிதி தான். தற்போது இந்த அமைச்சகத்தின் கீழ் இருக்கும் அமைச்சர் தான், தமிழ்வளர்ச்சித் துறைக்காக இல்லாமல், இந்தி வளர்ச்சித் துறை அமைச்சராக உள்ளார். அதற்கு காரணமும் நீங்கள் தான் என அங்கே கூடியிருந்த கட்சியினர் கூட்டத்தை பார்த்து கூறினார்.
தமிழை ஒடுக்குவதற்கும், அதை மறக்கடிக்கும் வேலைகளில் தான் தற்போதைய முதல்வரான எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி கவனம் செலுத்துகிறது என்று குற்றம் சாட்டிய உதயநிதி ஸ்டாலின், உலகப் பொதுமறை திருக்குறளுக்கு காவி போட்டவர்கள் அதிமுகவினர் தான், கொஞ்சம் விட்டிருந்தால் திருவள்ளுவரையே நாங்கள் தான் கூட்டி வந்தோம் எனவும் கூறியிருப்பார்கள் என்றும் அவர் விமர்சித்தார்.
இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினரான வி.ஜி.ராஜேந்திரன், பூந்தமல்லி சட்ட மன்ற உறுப்பினரான ஆர்.கிருஷ்ணசாமி மற்றும் மாவட்ட செயலாளர் நாசர் ஆகியோர் கலந்து கொண்டனர்