Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

எதையும் காலில் விழுந்து கெஞ்சிப் பெறும் நாடாக உக்ரைன் இருக்கக் கூடாது: – உக்ரைன் அதிபர்!

எதையும் காலில் விழுந்து கெஞ்சிப் பெறும் நாடாக உக்ரைன் இருக்கக் கூடாது: – உக்ரைன் அதிபர்!

சோவியத் யூனியனிலிருந்து ஐரோப்பாவைப் பாதுகாக்க பனிப்போரின் தொடக்கத்தில் உருவாக்கப்பட்ட அட்லாண்டிக் கூட்டமைப்பே நேட்டோ ஆகும். காலப்போக்கில் நேட்டோ அமைப்பு கிழக்கு நாடுகளை தன் கூட்டமைப்பில் சேர்த்துக்கொண்டது. அதன் காரணமாக நேட்டோ விரிவாக்கத்தை ஒரு அச்சுறுத்தலாக ரஷியா பார்க்கிறது.

இந்நிலையில், உக்ரைனும் ஐரோப்பா மற்றும் நேட்டோ நாடுகளுடன் சேர ஆர்வம் காட்டியது. நேட்டோ நாடுகளுடன் உக்ரைன் நாடு சேர்ந்து விட்டால் தங்கள் நாட்டு பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமைந்து விடும் என்று ரஷியா கருதியது. இதன் காரணமாகவே உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளது.

உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் இன்று 14-வது நாளாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த போரின் காரணமாக உக்ரைன் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதையடுத்து தினமும் லட்சக்கணக்கான மக்கள் உயிருக்கு பயந்து அண்டை நாடுகளுக்கு சென்று தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

போர் தீவிரமடைந்து வரும் இந்த சூழ்நிலையில், ரஷியா – உக்ரைன் நாடுகளுக்கு இடையே இதுவரை மூன்று கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்துள்ளன. இந்த மூன்று கட்ட பேச்சுவார்த்தையிலும் எந்தவொரு முடிவும் எட்டப்படவில்லை. இந்த நிலையில், நேட்டோ அமைப்பில் உக்ரைனை சேர்த்துக்கொள்ள அழுத்தம் கொடுக்கப்போவதில்லை என உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, “உக்ரைனை நேட்டோவில் இணைத்துக்கொள்ள அந்த அமைப்பில் உள்ள நாடுகள் முனைப்பு காட்டவில்லை  என தோன்றுகிறது. ரஷியாவுடனான போர் மற்றும் சர்ச்சைகளைக் கருத்தில் கொண்டே நேட்டோ அமைப்பு உக்ரைனை படையில் சேர்த்துக் கொள்ள அஞ்சுகிறது.

எதையும் காலில் விழுந்து கெஞ்சிப் பெறும் நாடாக உக்ரைன் இருக்கக் கூடாது. எனக்கு வாக்களித்த மக்கள் சரணடைய தயாராக இல்லை. பேச்சுவார்த்தையில் அதிபர் புதின் நேரடியாக கலந்து கொள்ள முன் வர வேண்டும். புதிதாக அங்கீகரிக்கப்பட்ட குடியரசுகள் போலியான குடியரசுகள். அங்கு வாழும் உக்ரைன் மக்கள் உக்ரைனுடன் சேரவே விரும்புகின்றனர்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Exit mobile version