கண்டு கொள்ளாமல் விட்ட அன்புமணி ராமதாஸ் திட்டத்தை மீண்டும் அதிரடியாக செயல்படுத்த முயற்சிக்கும் மத்திய சுகாதாரத்துறை! மருத்துவர் ராமதாஸ் வரவேற்பு

0
192
Dr-Ramadoss-News4-Tamil-Latest-Online-Tamil-News-Today

கண்டு கொள்ளாமல் விட்ட அன்புமணி ராமதாஸ் திட்டத்தை மீண்டும் அதிரடியாக செயல்படுத்த முயற்சிக்கும் மத்திய சுகாதாரத்துறை! மருத்துவர் ராமதாஸ் வரவேற்பு

தமிழக அரசியலில் பாமக மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும் அக்கட்சியின் கொள்கைகள் மற்றும் கடந்த கால செயல்பாடுகள் மூலம் படித்தவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் நல்ல செல்வாக்கை பெற்றுள்ளது. அன்புமணி ராமதாஸ் மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக பதவி வகித்த போது உலக நாடுகளே பாராட்டும் அளவிற்கு இந்திய சுகாதார துறையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார். அதில் 108 இலவச ஆம்புலன்ஸ் திட்டம், போலியோ ஒழிப்பு மற்றும் பொது இடங்களில் புகைப் பிடிக்க தடை போன்றவை குறிப்பிடத்தக்கவையாகும்.

ஆரம்பத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்ட பொது இடங்களில் புகைப் பிடிக்க தடை சட்டம் நாளடைவில் கண்டு கொள்ளாமல் விடப்பட்டது. இந்நிலையில் மீண்டும் அந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த மத்திய சுகாதாரத்துறை அதிரடி முடிவை எடுத்துள்ளது. இதற்கு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் “பொது இடங்களில் புகைத்தால் கூடுதல் தண்டம்: அரசின் முடிவு வரவேற்கத்தக்கது!” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

பொது இடங்களில் புகைப்பிடிப்போருக்கு விதிக்கப்படும் அபராதத்தை பலமடங்கு உயர்த்த மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. பொது இடங்களில் புகை பிடிப்பதை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், மத்திய அரசின் இந்த முடிவு வரவேற்கத்தக்கதாகும்.

Anbumani Ramadoss Next Deputy Chief Minister of Tamilnadu-News4 Tamil Online Tamil News Channel
Anbumani Ramadoss Next Deputy Chief Minister of Tamilnadu-News4 Tamil Online Tamil News Channel

பொது இடங்களில் புகை பிடிப்பதால் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் பொது இடங்களில் புகைப் பிடிப்பதை தடை செய்யும் சட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் தான் மத்திய சுகாதார அமைச்சராக இருந்த போது கொண்டு வந்தார். 2008-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் தேதி காந்தியடிகள் பிறந்தநாள் முதல் நடைமுறைக்கு வந்த புகைத்தடை தொடக்கத்தில் சில ஆண்டுகள் தீவிரமாக செயல்படுத்தப் பட்டாலும், காலப்போக்கில் கண்டுகொள்ளாமல் விடப்பட்டது. பொது இடங்களில் புகை பிடிப்பதற்கு அதிகபட்சமாக 200 ரூபாய் மட்டுமே அபராதமாக விதிக்கப்படுகிறது. சில நேரங்களில் 50 ரூபாய் கூட அபராதமாக வசூலிக்கப்படுகிறது. பொது இடங்களில் புகை பிடிப்பதை இந்த குறைந்தபட்ச அபராதம் தடுக்கவில்லை என்பதால் தான் அபராதத்தை உயர்த்த மத்திய சுகாதாரத்துறை தீர்மானித்திருக்கிறது.

மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவுக்கு ஒப்புதல் கிடைத்த பிறகு இது நடைமுறைக்கு வரும். பொது இடங்களில் புகை பிடிப்பதைக் கட்டுப்படுத்த இத்தகைய நடவடிக்கைகள் அவசியமாகும். பொது இடங்களில் புகை பிடிப்போருக்கு விதிக்கப்படும் அபராதத்தை ரூ.5 ஆயிரமாக அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த அக்டோபர் 21&ஆம் தேதி அறிக்கை வெளியிட்டிருந்தேன். பொது இடங்களில் புகை பிடிப்பதை கைவிட வலியுறுத்தி கடந்த ஆண்டில் விழிப்புணர்வு துண்டறிக்கைகளை வெளியிடும் பரப்புரை இயக்கங்களை பா.ம.க. நடத்தியது. அதன் பயனாக பொது இடங்களில் புகை பிடிப்போருக்கு அபராதத்தை உயர்த்த மத்திய அரசு தீர்மானித்திருப்பது பாராட்டப்பட வேண்டியதாகும்.

2008-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் தேதி பொது இடங்களில் புகைப்பிடிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை நடைமுறைக்கு வந்த போது பெண்களும், குழந்தைகளும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். மக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் புகைப்பிடிப்பது முற்றிலுமாக தடை செய்யப்பட்டிருந்ததால், அவர்கள் தொல்லையின்றி நடமாட முடிந்தது. ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக மாறி விட்டதால் பொது அரங்குகள், பொழுதுபோக்கு பூங்காக்கள், உணவகங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் பெண்களும், குழந்தைகளும் முகத்தை மூடிக் கொண்டே நடமாட வேண்டியுள்ளது. புகைக்கொடுமையிலிருந்து தங்களுக்கு விடுதலை கிடைக்காதா? என வெளிப்படையாகவே அவர்கள் குமுறுவதை காணமுடிகிறது.

பொது இடங்களில் புகைப்பிடிப்பதால் பெண்களுக்கும், குழந்தைகளும் ஏற்படும் பாதிப்புகள் கொஞ்ச நஞ்சமல்ல. பொது இடங்களில் பிறர் உள்ளிழுத்து விடும் புகையிலையின் புகையை சுவாசிப்பவர்களுக்கு இதய நோய் ஏற்படும் வாய்ப்புகள் 40% அதிகமாக உள்ளன. பொதுவெளியில் விடப்படும் புகையில் 7000 வேதிப்பொருட்கள் உள்ளன. இவற்றில் 69 வேதிப்பொருட்கள் புற்றுநோயை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை ஆகும். பொது இடங்களில் விடப்படும் புகையை சுவாசித்தால் நுரையீரல் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், கணையப் புற்றுநோய், கருப்பைவாய் புற்றுநோய், சிறுநீர்ப்பை புற்றுநோய் உள்ளிட்ட பல வகையான புற்றுநோய்களும், ஆஸ்துமா, நீரிழிவு நோய் உள்ளிட்ட பாதிப்புகளும் ஏற்படுகின்றன.

பிறர் இழுத்து விடும் புகையை சுவாசிப்பதால் மட்டும் உலகம் முழுவதும் 6 லட்சம் பேர் இறக்கின்றனர். அவர்களில் 1.30 லட்சம் பேர் இந்தியர்கள். பொது இடங்களில் புகைபிடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் இந்த அளவுக்கு மோசமாக இருக்கும் நிலையில், அதை கட்டுப்படுத்த வேண்டியது மிகவும் அவசியமாகும். பொது இடங்களில் புகை பிடிப்போருக்கு கூடுதல் அபராதம் விதிக்கும் மத்திய அரசு முடிவு செயல்வடிவம் பெற்றால் அது பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பெரும் நன்மையாகவும், நிம்மதியாகவும் அமையும்.

எனவே, மத்திய அரசு காலதாமதம் செய்யாமல் பொது இடங்களில் புகை பிடிப்போருக்கு கூடுதல் அபராதம் விதிக்கும் முடிவை அறிவிக்க வேண்டும். இந்த முடிவை தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் மிகத்தீவிரமாக செயல்படுத்தி பெண்களையும், குழந்தைகளையும் காப்பாற்ற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.