Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தூக்கி எறிந்த தொகுதி மக்கள்! கைவிடாத மத்திய அமைச்சர்!

சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் தாராபுரம் சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட பாஜகவின் முன்னாள் தலைவர் முருகன் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கயல்விழி செல்வராஜிடம் தோல்வியை சந்தித்தார்.

வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற சமயத்தில் காலை முதல் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்த முருகன் மாலைக்கு பின்னர் பின்னடைவை சந்தித்தார். வெறும் 1393 வாக்குகள் வித்தியாசத்தில் தன்னுடைய வெற்றி வாய்ப்பை இழந்த முருகனால் இதனை கொஞ்சமும் சகித்துக் கொள்ள முடியவில்லை என்கிறார்கள்.

தமிழ்நாட்டில் பாஜகவிற்கு செல்வாக்கு மிக்க ஒரு தொகுதிகளில் தாராபுரம் ஒன்று என்று சொல்கிறார்கள் அப்படி இருந்தும் கூட அங்கே முருகன் அடைந்த தோல்வி பாஜகவின் தேசியத் தலைமையை அதிர்ச்சி அடைய செய்தது. தேர்தலுக்கு 6 மாதங்களுக்கு முன்பாகவே தாராபுரத்தை இலக்காக கொண்டு அங்கே அடிக்கடி சென்று வந்து தேர்தல் பணிகளை செய்து வந்தார் முருகன்.

அவர் ராசிபுரம் தொகுதியில் போட்டியிடுவார், அவிநாசி தொகுதியில் போட்டியிடுவார் என்று பலரால் தெரிவிக்கப்பட்டாலும் யாரும் எதிர்பார்க்காத விதத்தில் தாராபுரத்தை தன்னுடைய தொகுதியாக தேர்ந்தெடுத்தார் முருகன் .இந்த சூழ்நிலையில், அவரை தோற்கடித்ததற்கு சன்மானமாக கயல்விழி செல்வராஜ் அவர்களுக்கு தன்னுடைய அமைச்சரவையில் இடம் அளித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.

இங்கே நிலவரம் இப்படியிருக்க சமீபத்தில் நடந்த மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தின் போது முருகனுக்கு மத்திய இணை அமைச்சர் பதவி பாஜகவின் தரப்பில் கொடுக்கப்பட்டது தமிழ்நாட்டில் 4 சட்டசபை உறுப்பினர்கள் வெற்றிபெற்று தந்ததற்கு பரிசாக அவருக்கு அந்த பதவி கொடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

மத்திய இணையமைச்சர் பொறுப்பிற்கு வந்தபின்னர் டெல்லியிலேயே இருக்கும் முருகன் ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவி இடம் தாராபுரத்திற்கு தனி முக்கியத்துவம் வழங்கும் விதத்தில் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்திருக்கின்றார். அதில் ஈரோட்டில் இருந்து பழனிக்கு தாராபுரம் வழியே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

ஈரோட்டிலிருந்து தாராபுரம் வழியாக பழனியை ஒன்று இணைக்கும் ரயில் பாதை அமைக்க கடந்த 1915-ம் வருடம் ஆங்கிலேயர் காலத்தில் சர்வே எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதோடு கடந்த 2006 முதல் 2007ஆம் ஆண்டு வரையிலான நிதிநிலை அறிக்கையில் இந்தத் திட்டம் தொடர்பாக அறிவிக்கப்பட்டு 289 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் இதுவரையில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்படாத காரணத்தால், இந்த திட்டத்தின் மதிப்பு தற்சமயம் ஆயிரத்து 140 கோடி ரூபாய் என்ற அளவிற்கு எகிறி இருக்கிறது.

திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, உள்ளிட்ட மூன்று மாவட்ட பொதுமக்கள் இந்த திட்டம் மூலமாக பயனடைவார்கள் எனவும் அதிலும் குறிப்பாக அந்த பகுதிகளைச் சார்ந்த விவசாயிகளுக்கு இந்த திட்டம் உதவிகரமாக இருக்கும் என்றும், ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவி இடம் எடுத்து தெரிவித்திருக்கின்றார் மத்திய இணை அமைச்சர் முருகன்.

அதேபோல வாரணாசியில் இருந்து காஞ்சிபுரம் மூலமாக ராமேஸ்வரத்திற்கு விரைவு ரயிலை இயக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறார். தாராபுரத்தில் வெற்றி பெற்று சட்டசபை உறுப்பினராக ஆகா விட்டாலும் கூட அந்த தொகுதியின் வளர்ச்சிக்கு மிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் என்பது கவனிக்கத்தக்கது.

Exit mobile version