நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்! கடலூர் மாவட்டத்தில் தொடங்கியது மறுவாக்குப்பதிவு!

0
99

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19ஆம் தேதி நடந்தது அதோடு நேற்று முன்தினம் அந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டது, இதில் திமுக மாபெரும் வெற்றியை பெற்றிருக்கிறது.

இந்த சூழ்நிலையில், கடலூர் மாநகராட்சி மற்றும் மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகள் 14 பேரூராட்சிகளுக்கான வாக்குப்பதிவு முடிந்ததும் அன்றிரவு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணிக்கை மையமான புவனகிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு கொண்டு சென்று பாதுகாப்பாக வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் புவனகிரி பேரூராட்சியில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.

அப்போது 4வது வார்டில் உள்ள வாக்குச்சாவடி எண் 4ல் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரம் திடீரென்று பழுதாகி போனது. அதன் பிறகு பெல் நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் சரி பார்த்த பிறகும் அதனை சரி செய்ய இயலவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக, 4வது வார்டுக்கான வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், புவனகிரி பேரூராட்சி 4-ஆவது வார்டு திருவள்ளுவர் தெருவிலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி எண் 4ல் இன்று மறுவாக்குப்பதிவு நடத்தப்படும் என்று தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

அதனடிப்படையில், இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதில் மாலை 5 மணி முதல் 6 மணி வரையில் ஒரு மணிநேரம் நோய்த்தொற்று அறிகுறி இருப்பவர்கள் அதற்கான சான்றிதழை வழங்கி வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

அதன்பிறகு வாக்குப்பதிவு முடிந்தவுடன் அதே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வைத்து வாக்கு எண்ணிக்கை தொடங்கி தேர்தல் முடிவுகள் உடனடியாக அறிவிக்கப்படவுள்ளது. இந்த பணியில் தேர்தல் நடத்தும் அலுவலரும் புவனகிரி பேரூராட்சி செயல் அலுவலருமான அருள்குமார் மேற்பார்வையில் 15 ஊழியர்கள் ஈடுபடவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

மாறு வாக்குப்பதிவை முன்னிட்டு வாக்கு பதிவு மையத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. மேலும் எந்தவிதமான அசம்பாவிதமும் நடைபெறாத வகையில் தடுக்கும் விதமாக 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள்.