கோவில் நிலங்களில் வசிப்பவர்களுக்கான வாடகை, குத்தகை கட்டணங்களை சீர் செய்வதற்கு அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை பெறப்பட்ட பின்பு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் கோயில் நிலங்களில் பல்லாண்டு காலமாக வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்றும் கொரோனா காலத்தில் செலுத்த வேண்டிய வாடகை மற்றும் குத்தகை தொகையை தள்ளுபடி செய்ய கோரி மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் நாகை மாலி மற்றும் சின்னதுரை ஆகியோர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.
அப்போது பேசிய சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி, கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து இருப்பவர்களை அப்புறப்படுத்தப்படலாம். ஆனால், பல தலைமுறைகளாக 400 முதல் ஆயிரம் சதுர அடியில் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதே போல வாடகை குத்தகை தொகையும் உயர்ந்தபட்டு இருப்பதாகவும், கொரோனா காலத்தில் செலுத்த வேண்டிய வாடகையை ரத்து செய்யவேண்டும் என்றும் உறுப்பினர் நாகை மாலி தெரிவித்தார்.
இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் சேகர் பாபு, வறுமை கோட்டிற்கு கீழ் வசிப்பவர்களை எந்த இடத்திலும் அகற்ற கூடாது என்று முதலமைச்சர் தெரிவித்து இருப்பதால், யாரும் அகற்றப்படவில்லை என்றார்.
பட்டா வழங்குவது தொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதாகவும், தீர்ப்பின் அடிப்படையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், மனைபிரிவுகளுக்கு சந்தை வழிகாட்டுதல் மதிப்பின் அடிப்படையில் 0.1 சதவிதம் வாடகையாகவும், வணிக பிரிவுகளுக்கும் இதே போல 0.5 சதவீதம் வாடகை நிர்ணயம் செய்வதாக தெரிவித்தார். ஆனால், 3 ஆண்டுகள் 4 தவணைகள் செலுத்தவில்லை என்றார்.
இந்து சமய அறநிலையத் துறையில் செலவினை ஈடு செய்வதற்கு வணிக நிறுவனங்களில் வசூல் செய்ய வேண்டிய நிலைவுள்ளதாவும், கோவில் நிலங்களில் இருந்து கொண்டு அதிக லாபம் அடைந்ததும் கோவில்களுக்கு கூட வாடகை செலுத்தாதவர்களிடம் தான் வசூலிக்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், இது போன்ற வாடகை, குத்தகை ஏற்றத்தாழ்வுகளை தவிர்க்க தலைமைச்செயலாளர் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டு இருப்பதாவும், கடந்த எட்டு மாதங்களாக ஆய்வு செய்து வரும் நிலையில், விரைவில் அறிக்கை பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.