Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தாலிபனுக்கு பயந்து காபுலில் திடீரென படைகளை குவிக்கும் அமெரிக்கா, இங்கிலாந்து! உச்சக்கட்ட பதற்றத்தில் ஆப்கன்!!

Afghanistan

Afghanistan

ஆப்கானிஸ்தானில் படைகளை திரும்பப்பெறுவது என அமெரிக்கா அறிவித்ததைத் தொடர்ந்து, நேட்டோ படைகள், இங்கிலாந்து உள்ளிட்ட மற்ற நாடுகளின் படைகளும் திரும்பப் பெறப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால், அவர்கள் அரசுக்கு ஆதரவாக செயல்பட மாட்டார்கள் என்பதால், தாலிபன்கள் அதிதீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

முதலில் நாட்டின் எல்லைகளை முழுமையாக தங்களது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்த தாலிபன்கள், ஒவ்வொரு மாகாணத்திலும் புகுந்து, முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்றனர். கடந்த 5 நாட்களில் அதிரடி தாக்குதல்களை நடத்தி, 10 மாகாணங்களை முழுமையாக கைப்பற்றினர்.

இந்நிலையில், தலைநகர் காபுலை சுற்றியுள்ள அனைத்து மாகாணங்களையும் கைப்பற்றியுள்ள தாலிபன்கள், இடையிடையே காபுல் நகருக்குள்ளேயும் தாக்குதல் நடத்தி வருகின்னர். ஆனால், அவை ஒரு சிலரால் நடத்தப்படும் தாக்குதல் என்பதால், அரசப் படைகள் முறியடித்து வருகின்றனர். தாலிபன்கள் முழு வீச்சில் தாக்குதலை நடத்தினால், அங்குள்ள பொதுமக்களும், வெளிநாட்டினரும் உயிரிழக்க நேரிடும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனால், ஒவ்வொரு நாடுகளும் தங்களது தூதரக அதிகாரிகள், அவர்களது குடும்பங்கள், அங்கு பணியாற்றும் தங்கள் நாட்டினரை பத்திரமாக தாயகம் அழைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்தியாவும், அங்குள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்ப வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆப்கன் தலைநகர் காபுலில் உள்ள அமெரிக்கர்களை மீட்க, 3 படைகளைக் கொண்ட 3000 வீரர்கள் அனுப்பப்படுவார்கள் என கூறியுள்ளது. அவர்கள், அடுத்த 48 மணி நேரத்தில் தூதரக அதிகாரிகள் உட்பட தங்கள் நாட்டினரை பாதுகாப்பாக விமான நிலையம் அழைத்துச் சென்று, தாயகம் அழைத்துச் செல்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் கோரிக்கையை ஏற்று, தற்காலிகமாக படை வீரர்கள் சென்று அங்குள்ள பொதுமக்களை மீட்பார்கள் என்றும், தேவைப்பட்டால், தங்களது பாதுகாப்புக்காகவும், தங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், எதிர்த்து பதிலடி கொடுக்கவும் அவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் பெண்டகன் தெரிவித்துள்ளது.

இந்த 3000 வீரர்கள் இல்லாமல், குவைத்தில் 3500 வீரர்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் காபுலில் வீரர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை சரிசெய்ய பயன்படுத்தப்படுவார்கள். மேலும், கத்தாரில் கூடுதலாக 1000 வீரர்கள் சிறப்பு விசா வழங்கி தங்கள் நாட்டினை மீட்டு வருவதற்காக தங்கியிருந்து பணிகளை மேற்கொள்வார்கள் என்றும் பெண்டகன் அறிவித்துள்ளது.

இதே போன்று, இங்கிலாந்து தூதர அதிகாரிகள் மற்றும் அந்நாட்டினரை பத்திரமாக அழைத்துவர, 600 வீரர்களை காபுலுக்கு இங்கிலாந்து அனுப்பியுள்ளது. பல்வேறு நாடுகளும் தங்கள் நாட்டினரை பத்திரமாக தாயகம் திரும்புமாறு அறிவுறுத்தியுள்ளதால், ஆப்கன் தலைநகர் காபுலில் போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது.

Exit mobile version