ரஷிய விமானங்களை துல்லியமாக தாக்கும் ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்கியுள்ளது அமெரிக்கா!

0
111

ரஷிய விமானங்களை துல்லியமாக தாக்கும் ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்கியுள்ளது அமெரிக்கா!

உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி 24-ந் தேதி போர் தொடங்கிய ரஷிய ராணுவம் இன்று 14-வது நாளாக உக்ரைன் மீதான தாக்குதலை நடத்தி வருகிறது. ரஷ்ய ராணுவம் நடத்தி வரும் தீவிர தாக்குதலால் அச்சமடைந்துள்ள உக்ரைன் மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

தனது தீவிர தாக்குதலால் உக்ரைனில் உள்ள பல முக்கிய நகரங்களை ரஷிய ராணுவம் கைப்பற்றியுள்ளது. இதையடுத்து, தற்போது உக்ரைன் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன ரஷிய படைகள். இதனிடையே, இரு நாடுகளுக்கு இடையே நடைபெற்ற மூன்று கட்ட பேச்சுவார்த்தையில் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை.

இந்த நிலையில், உக்ரைனுக்கு “எப் ஐ எம்-92ஏ” எனப்படும் ‘ஸ்டின்ஜெர் மிசைல்’ ஆயுதங்களை வழங்கி உதவியுள்ளது அமெரிக்கா. அதிக சக்திமிக்க இந்த ஆயுதங்கள் வான்படைகளை குறிவைத்து தாக்கும் திறன் கொண்டவையாகும்.

உக்ரைன் படைகள் மீது ரஷிய படைகள் ஹெலிகாப்டர்கள் மூலம் வான்வழி தாக்குதலை நடத்தி வருவதால் அதனை திறம்பட எதிர்கொள்ளும் விதத்தில் உக்ரைனுக்கு உதவியாக இந்த ‘ஸ்டின்ஜெர் மிசைல்’ ஆயுதங்களை வழங்கி உதவியுள்ளது அமெரிக்க ராணுவம்.

இந்த ‘ஸ்டின்ஜெர் மிசைல்’ போர் ஆயுதங்கள், “வான்வழி போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றை குறிவைத்து தாக்கி அழிக்கும் திறன் கொண்டவையாகும்.” இவற்றை பயன்படுத்தி தரையில் இருந்துகொண்டே எளிதாக, வானில் தாழ்வாக பறக்கும் எதிரி விமானங்களை தாக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இந்த ஆயுதம் 15 கிலோ எடையும், ஒன்றரை மீட்டர் நீளமும் கொண்டது. தோளில் சுமந்து கொண்டு உபயோகப்படுத்தும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ‘ஸ்டின்ஜெர் மிசைல்’ போர் ஆயுதங்கள் சுமார் 8 கி.மீ தூரத்துக்கு  பயணித்து தாக்கும் திறன் கொண்டது என கூறப்படுகிறது.